தெலுங்கானா: கம்மம் மாவட்டம் என்வி பஞ்சாரா கிராமத்திற்கு மத்தியப் பிரதேசத்தின் பாலகாட் மாவட்டம் பிபடோலாவைச் சேர்ந்த சுமார் 20 தொழிலாளர்கள் இரண்டு மாதங்களுக்கு முன்பு விவசாய கூலித் தொழிலுக்காக வந்தனர்.
இதில் தயாள், மதிவி செத்ரம் ஆகிய நண்பர்களிடையே கூலி தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து இருவரும் அக்டோபர் 11ஆம் தேதி இரவு மதுஅருந்தியுள்ளனர். அப்போது தனக்கு தரவேண்டிய ரூ.100யை தருமாறு மதிவி செத்ரம் தயாளிடம் கேட்டு உள்ளார். இதனால் மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
தகராறு முற்றிய நிலையில், ஒருவரை ஒருவர் தாக்க ஆரம்பித்தனர். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த மதிவி செத்ரம் தயாளை காய் நறுக்கும் கத்தியால் நெஞ்சு பகுதியில் குத்தினார். இதில் தயாள் நிலைகுலைந்து கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தயாளின் உடலை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், மதிவி செத்ரம் தனக்கு தரவேண்டிய ரூ.100யை தயாள் தராததால் கொலை செய்தது தெரியவந்தது.
பின் மதிவி செத்ரமை கைது செய்து சிறையில் அடைத்தனர். மதிவி செத்ரமுக்கும் தயாளுக்கும் திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். நூறு ரூபாய்க்காக நண்பரை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தொழிலாளர் கொலை வழக்கு: திமுக எம்பி ரமேஷுக்கு 15 நாள் நீதிமன்ற காவல்