அலிகர்: டெல்லியில் இருந்து உத்தரப்பிரதேசம் மாநிலம், கான்பூருக்குச் சென்று கொண்டிருந்த நிலஞ்சல் விரைவு ரயிலில், ஹிருஷிகேஷ் துபே என்ற பயணி, ஜன்னல் சீட்டில் அமர்ந்து பயணம் செய்து இருக்கிறார்.
இந்நிலையில், இன்று காலை 8.30 மணி அளவில், நிலஞ்சல் விரைவு ரயில், தன்வார் மற்றும் சோம்வார் ரயில் நிலையங்களுக்கு இடையே சென்றபோது, திடீரென ஜன்னல் கண்ணாடியை உடைத்துக்கொண்டு ரயில் உள்ளே புகுந்த இரும்பு கம்பி, ஹிருஷிகேஷ் கழுத்தில் பாய்ந்துள்ளது. இதில், கழுத்தில் துளையிடப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் மிதந்த ஹிருஷிகேஷ், பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனைக்கண்ட சக பயணிகள் ரயிலை நிறுத்தியுள்ளனர். இதனால் அலிகர் பகுதியில் ரயில் நிறுத்தப்பட்டது. மேலும் இச்சம்பவம் குறித்து ரயில்வே காவலர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர், ஹிருஷிகேஷின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், சம்பவம் நிகழ்ந்த இடம் அருகே ரயில் தண்டவாளம் பணி நடைபெற்று வருவதாகவும், அதற்காக அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த கம்பி எதிர்பாராத விதமாக ரயில் ஜன்னல் வழியாக புகுந்து ஹிருஷிகேஷின் கழுத்தில் பாய்ந்துள்ளது எனத் தெரியவந்துள்ளது. மேலும் இது கொலையா அல்லது தற்செயலாக நிகழ்ந்த சம்பவமா என்னும் கோணங்களில் ரயில்வே காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: இளைஞர் உயிரிழப்பில் நிறைந்திருக்கும் மர்மம் - லிவ் இன் காதலியிடம் விசாரணை