புதுச்சேரி நகரப் பகுதியில் மரங்கள் அதிகம் உள்ள காமாட்சி அம்மன் கோயில் தெரு மற்றும் பெருமாள் கோயில் தெருக்களில் அவ்வப்போது அணில்கள் இறந்து சாலைகளில் கிடப்பதாக வனத்துறைக்குத் தகவல் கிடைத்தது.
இந்நிலையில், நேற்று முன் தினம் (டிச.23) அப்பகுதியில் அணில்கள் இறந்து விழுவதையும், அதை ஒருவர் எடுப்பதையும் பார்த்த அப்பகுதி மக்கள், அவரைப் பிடித்து வனத்துறையில் ஒப்படைத்தனர். அவரிடம் சோதனை செய்ததில் இறந்த அணில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில், கோவிந்த சாலையைச் சேர்ந்த ஆட்டோ ஒட்டுநர் சார்லஸ் (49) என்பது தெரியவந்தது. இதுதொடர்பாக, வனத்துறையினர் கூறுகையில், “பிஸ்கெட் போன்ற தின்பண்டங்களில் நெல்லுக்கு அடிக்கும் பூச்சி மருந்தை தடவி அணில்களை வேட்டையாடி, அணிலின் வால் முடியை ஓவியம் வரையும் பிரஷ் தயாரிக்க கொடுத்தது தெரியவந்தது. புதுச்சேரி மாநில விலங்கான அணிலை விஷம் வைத்து கொன்றது தொடர்பாக மேலும் விசாரித்து வருகிறோம்” என்று குறிப்பிட்டனர்.
இதைத்தொடர்ந்து வனத்துறையினர் சார்லஸிடம் இருந்த 50 இறந்த அணில்களை பறிமுதல் செய்து பிரேத பரிசோதனைக்குப் பின் அடக்கம் செய்தனர்.