தெலங்கானா: நாடு முழுவதும் பல மாநிலங்களில் கடந்த ஓரிரு வாரங்களாக தக்காளியின் விலை அதிகரித்து காணப்படுகிறது. பல மாநிலங்களில் ஒரு கிலோ தக்காளி 200 ரூபாய் வரை விற்பனையாகி வருகிறது. தொடர் மழை காரணமாக தக்காளி விளைச்சல் குறைந்ததே இந்த விலை உயர்வுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. தக்காளி விலை உயர்வால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதற்கிடையில், தக்காளி விலை உயர்வு காரணமாக தக்காளியைத் திருடுவது, தக்காளியைப் பரிசாகக் கொடுப்பது உள்ளிட்ட சம்பவங்களும் நடந்து வருகின்றன.
அந்த வகையில், தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் ஒரு சுவாரசிய சம்பவம் நடந்துள்ளது. நபர் ஒருவர், தனது மகளின் பிறந்தநாள் விழாவில் விருந்தினர்களுக்கு வழக்கமான விருந்துடன் பரிசாக தக்காளியை விநியோகம் செய்துள்ளார். ஹைதராபாத்தின் பஞ்சகுட்டா பிரதாப் நகர் பகுதியில் நேற்று(ஜூலை 19) அரசியல் பிரமுகரான சிவ மதிகா என்பவரது மகளின் பிறந்தநாள் விழா நடைபெற்றது.
மகளின் பிறந்தநாளை சிறப்பானதாக மாற்ற நினைத்த சிவ மதிகா, சுமார் 400 கிலோ தக்காளியை விலைக்கு வாங்கி விருந்தினர்களுக்கு விநியோகம் செய்துள்ளார். விழாவுக்கு வந்த விருந்தினர்கள் மட்டுமல்லாமல் உள்ளூர் மக்களும் முண்டியடித்துக் கொண்டு தக்காளியை வாங்கிச் சென்றனர்.
முன்னதாக, கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஆந்திராவில் தக்காளியை வைத்து துலா பாரம் கொடுத்த சம்பவம் சமூக வலைதளங்களில் கவனத்தை ஈர்த்தது. ஆந்திரா மாநிலம், அனக்காபள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த அப்பா ராவ் - மோகினி தம்பதியினர், அம்மன் கோயிலில் தங்கள் மகளுக்காக வேண்டுதல் வைத்திருந்தனர். அந்த வேண்டுதல் நிறைவேறியதால் காணிக்கை செலுத்த சென்றனர். அப்போது, தங்களது மகளை துலாத் தட்டில் உட்கார வைத்து, அவரது எடைக்கு நிகராக, அதாவது 51 கிலோ எடை கொண்ட தக்காளியை வைத்து காணிக்கையாக கொடுத்தனர்.
இதேபோல், உத்தரப் பிரதேச மாநிலம், வாரணாசியில் தக்காளியைப் பாதுகாக்க பவுன்சர்களை நியமித்த சம்பவம் இணையத்தில் வைரலானது. சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்த நபர் ஒருவர், தனது காய்கறி கடையில் தக்காளியை பாதுகாக்க பவுன்சர்களை நியமித்தார். இது தொடர்பாக உத்தரப்பிரதேச போலீசார் அவதூறு வழக்குப் பதிவு செய்தனர்.
இதையும் படிங்க: கர்நாடகாவில் சுமார் ரூ.2.5 லட்சம் மதிப்பிலான தக்காளிகள் திருட்டு - டைமிங் அபேஸ்!