கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த குட்டிச்சால் மாவட்டத்தைச் சேர்ந்தவர் வினீத். பட்டதாரியான இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றிவந்தார். ஆன்லைனில் சூதாட்டம் விளையாடத் தொடங்கிய வினீத், தொடக்கத்தில் சிறிய தொகையைக் கட்டி ரம்மி விளையாடியுள்ளார்.
தொடக்கத்தில் சிறு, சிறு வெற்றி கிடைத்ததால், கையில் இருந்த பணம் முழுவதையும் செலுத்தி ஆன்லைனில் சூதாட்டம் விளையாடிவந்த அவர் பின்னர் கட்டிய பணத்தை இழக்கத் தொடங்குகிறார்.
இறுதியில் தனது சேமிப்புப் பணத்தை மொத்தமாக இழந்த அவர், சூதாட்டத்திற்கு அடிமையாகினார். தொடர்ந்து விளையாடினால், இழந்த பணத்தை மீட்டுவிடலாம் என நினைத்த வினீத், மேலும் வட்டிக்கு கடன் வாங்கி, அதை வைத்து ஆன்லைனில் ரம்மி விளையாடியதாக கூறப்படுகிறது.
இறுதியில் பணம் அத்தனையும் இழந்த அவருக்கு, இருந்த வேலையும் பறிபோனது. செய்வதறியாது திகைத்த வினீத், சொந்த ஊருக்குத் திரும்பியுள்ளார். ஏறத்தாழ 22 லட்சம் ரூபாயை கடனாக கொடுத்த நபர்கள் பணத்தை திரும்பத் தர வேண்டுமென நெருக்கடி கொடுத்துள்ளதாக அறிய முடிகிறது.
நிலைமை கையை மீறிச் சென்றதாக நினைத்த அவர், புத்தாண்டு நாளான நேற்று (ஜன. 01) வீட்டின் பின்புறத்தில் அமைந்துள்ள ரப்பர் தோட்டத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகத் தெரிகிறது.
இது தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், அவரது உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அனுப்பிவைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவுசெய்த காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளால் கடனாளிகள் ஆகிய பலர் தற்கொலை செய்துவரும் சம்பவங்கள் தொடர்கதையாகி அதிகரித்துக்கொண்டே வருகிறது. தமிழ்நாடு, ஆந்திரப்பிரதேசம் போன்ற அண்டை மாநிலங்களில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதைப் போல கேரளாவிலும் ரம்மி விளையாட்டுகளைத் தடைசெய்யும் வகையில் அவசரச்சட்டம் (ordinance) கொண்டுவரப்பட வேண்டுமென அம்மாநிலத்தில் சமூக ஆர்வலர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இதையும் படிங்க : முதலமைச்சருக்கு கொலை மிரட்டல் விடுக்கும் சுவரொட்டி - வழக்கு பதிவு செய்த காவல்துறையினர்!