தெலங்கானா மாநிலம ரங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள குர்ராம்குடா ஆசிரியர் காலனியில் வசிப்பவர் விமலா. இவரின் கணவரும், ராகுல் என்பவரும் நெருங்கிய நண்பர்கள் ஆவர். இருவரும் ஒன்றாக சுற்றுவதால், அடிக்கடி ராகுல் விமலா வீட்டிற்கு வந்துள்ளார். நாளடைவில் இவர்களுக்கிடையே நட்பு வளர்ந்துள்ளது.

இதைப் பார்த்து பயந்த விமலாவின் கணவர், ராகுலிடமிருந்து விலக தொடங்கியுள்ளார். விமலா அன்றிலிருந்து கணவருடன் நிம்மதியாக வாழ்ந்துவந்துள்ளார்.
ஆனால், ராகுல் விமலாவை டார்ச்சர் செய்ய தொடங்கியுள்ளார். இதைப் பற்றி தனது கணவரிடம் விமலா கூறியுள்ளார். இதையடுத்து, ராகுல் மீது காவல் நிலையத்தில் புகாரளித்து, கடந்தாண்டு டிசம்பர் 27ஆம் தேதி ராகுலை காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.
பிரச்சினை முடிந்தது என இல்லற வாழ்க்கையைத் தொடங்கிய விமலாவுக்கு, ஒரே மாதத்தில் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. பிணையில் வெளியே வந்த ராகுல், சிறை தண்டனைக்கு விமலாதான் காரணம் எனக் கருதி, அவரை கொல்வதற்கு கோடரியுடன் வீட்டிற்கு விரைந்துள்ளார்.
வாசலில் குழந்தையுடன் நின்றுகொண்டிருந்த விமலாவை, ராகுல் இரக்கமின்றி கொடூரமாகத் தாக்கியுள்ளார். சத்தம் கேட்டு அக்கப்பக்கத்தினர் வருவதற்குள் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

பலத்த காயமடைந்த அப்பெண்ணை, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவரின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், நான்கு தனிப்படை அமைத்து ராகுலை கைதுசெய்தனர். இந்தத் தாக்குதலின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.