ஷ்ரத்தா கொலை பாணியில் சம்பவம் - மனைவியை கொலை செய்த கணவன் கைது! - மனைவியை கொன்ற கணவன் கைது
மேற்குவங்கத்தில் மனைவியை கொலை செய்து மூன்று துண்டுகளாக வெட்டி புதைத்த கணவனை போலீசார் கைது செய்தனர். கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பிஷ்ணுபூர்: டெல்லியில் கடந்த ஆண்டு நடந்த ஷ்ரத்தா வாக்கர் படுகொலை சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. காதலன் அப்தாப் தனது காதலி ஷ்ரத்தாவை கொலை செய்து, அவரது உடலை 35 துண்டுகளாக வெட்டி வனப்பகுதியில் வீசினார். கடந்த ஆண்டு மே மாதம் நடந்த இந்த சம்பவம் சுமார் ஆறு மாதங்களுக்குப் பிறகு வெளிச்சத்துக்கு வந்தது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து இதே பாணியில் பல கொலைகள் நடந்தன.
இந்த நிலையில், ஷ்ரத்தா வாக்கர் கொலை பாணியில் மற்றொரு கொலை சம்பவம் மேற்குவங்க மாநிலத்தில் நடந்துள்ளது. மேற்குவங்க மாநிலம் தெற்கு 24 பர்கானாஸில் உள்ள பிஷ்ணுபூரில், அலீம் ஷேக் - மும்தாஜ் சேக் (35) தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இரண்டு குழந்தைகளும் உள்ளனர். அலீம் ஷேக் ஒரு கட்டட ஒப்பந்ததாரராக பணிபுரிந்து வந்தார். மும்தாஜ் சாமாலி பகுதியில் உள்ள சாக்லேட் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். திருமணத்திற்குப் பிறகு இவர்கள் இருவரும் மும்தாஜின் பெற்றோருடன் தங்கியிருந்ததாகத் தெரிகிறது.
இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி வழக்கம்போல் இருவரும் வேலைக்குச் சென்றுள்ளனர். ஆனால், மாலையில் மும்தாஜ் வீட்டுக்குத் திரும்பவில்லை, அலீம் ஷேக் மட்டும் வந்துள்ளார். இதையடுத்து மும்தாஜின் குடும்பத்தினர் அலீமிடம் கேட்டுள்ளனர். மும்தாஜை சந்தையில் இறக்கிவிட்டதாகவும், விரைவில் வந்துவிடுவார் என்றும் கூறியுள்ளார். நீண்ட நேரமாகியும் மும்தாஜ் வரவில்லை.
இதுதொடர்பாக மும்தாஜின் குடும்பத்தினர் நேற்று போலீசில் புகார் அளித்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். பிறகு சந்தேகத்தின் அடிப்படையில் அலீமை விசாரித்தபோது, கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
மனைவியை கொலை செய்து, மூன்று துண்டுகளாக வெட்டி பிஷ்ணுபூரில் உள்ள நீர் நிலை அருகே புதைத்துவிட்டதாகவும் அலீம் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்தார். இதைத் தொடர்ந்து அலீமை குறிப்பிட்ட நீர் நிலைக்கு அழைத்துச் சென்ற போலீசார், புதைக்கப்பட்ட உடல் பாகங்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அலீம் திட்டமிட்டு இந்த கொலையை செய்துள்ளதாகவும், இதில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா? என்றும் விசாரணை நடத்தப்படுவதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் கொலைக்கான காரணம் குறித்தும் அலீமிடம் விசாரித்து வருவதாகவும் தெரிவித்தனர்.
குடும்பத் தகராறு காரணமாக கொலை நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அலீமை கடுமையாக தண்டிக்க வேண்டும் என மும்தாஜின் குடும்பத்தினரும், அப்பகுதி மக்களும் வலியுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: இந்து மதம் குறித்து சர்ச்சை கருத்து: கன்னட நடிகர் சேத்தன் குமார் கைது