மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட ஆறு மாநில விவசாயிகள் டெல்லி சலோ போராட்டம் நடத்திவருகின்றனர். கடந்த ஒன்பது நாள்களாகத் தொடர்ந்து போராட்டம் நடைபெற்றுவருகிறது.
நவ. 26ஆம் தேதியன்று போராட்டம் தொடங்கியபோது, விவசாய போராட்டக் குழுக்களைக் கலைக்கவும், டெல்லி செல்வதைத் தடுக்கவும் காவல் துறையினர் தண்ணீர் பீரங்கிகளைப் பயன்படுத்தினர். கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் விவசாயிகள் விரட்ட முயன்று அது முடியாமல்போக காவல் துறையினர் தடியடி நடத்தினர்.
எனினும், டெல்லிக்குச் செல்வதில் விவசாயிகள் உறுதியாக இருந்த நிலையில், விவசாயிகள் டெல்லிக்குள் நுழைவதற்குக் காவல் துறை அனுமதி அளித்தது. விவசாயிகள் டெல்லி புராரி பகுதியில் போராட்டம் நடத்த அனுமதிக்கப்பட்டனர்.
விவசாயிகள் விரோத புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டெல்லியில் போராடும் விவசாயிகள் மீதான அடக்குறைகளை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வன்மையாகக் கண்டித்துள்ளது.
இது தொடர்பாக தனது அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்த அக்கட்சியின் தலைவரும், மேற்கு வங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜி, “மேற்கு வங்க மாநிலம் சிங்கூரில் விவசாய நிலங்களை வலுக்கட்டாயமாக கையகப்படுத்துவதை எதிர்த்து, 14 ஆண்டுகளுக்கு முன்பு 2006 டிசம்பர் 4ஆம் தேதியன்று, கொல்கத்தாவில் எனது 26 நாள் உண்ணாநிலைப் போராட்டத்தைத் தொடங்கினேன்.
அதேபோல, இன்று நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து தங்களது உரிமையைக் காக்க போராடிவருகின்றனர். வேளாண் சீர்திருத்தச் சட்டங்கள் என்ற பெயரில் கொண்டுவரப்பட்டுள்ள இந்தப் புதிய சட்டங்கள் விவசாயிகளுக்கு உதவுவதற்காக நிறைவேற்றப்படவில்லை. அவை பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களின் நலனுக்காக நிறைவேற்றப்பட்டன. தனது சொந்த நலனுக்காக விவசாயிகளின் நலனை தியாகம் செய்வதே பாஜகவின் நோக்கமாகும்.
இந்தச் சட்டங்கள் உடனடியாகத் திரும்பப் பெறப்பட வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம். உழவர் விரோத, இந்திய அரசியலமைப்பிற்கு முரணான புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெறப்படாவிட்டால் நாடு முழுவதும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும்.
டெல்லியில் மட்டுமல்லாமல், இந்தியா முழுக்க தங்களின் உரிமைகளுக்காக அறவழியில் போராடிவரும் விவசாயிகளுக்கு, தோழமையைத் தெரிவிக்கிறோம். நாங்கள் விவசாயிகளுடன் நிற்கிறோம்” எனக் கூறியுள்ளார்.
இதையும் படிங்க : நக்ரோடா தாக்குதல்: தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றம்!