டெல்லி : நவம்பர் சட்டப் பேரவை தேர்தலுக்கு பின்னர் 5 மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும் என அக்கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்து உள்ளார். மேலும், மத்தியப் பிரதேசத்தில் தனது கட்சி அல்லது முதலமைச்சருக்குப் பதிலாக, பிரதமர் நரேந்திர மோடி தனது பெயரைச் சொல்லியே வாக்களிக்கக் கோருவதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மறைமுகமாக சாடினார்.
செய்தியாளர்கள் முன்னிலையில் பேசிய மல்லிகார்ஜூன கார்கே, அரசியல் சூழல் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக உள்ளதாகவும், ஐந்து மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் என்றும் தெரிவித்தார். காங்கிரஸ் கட்சி 5 மாநிலங்களிலும், பாஜக ஒரு மாநிலத்தில் கூட ஆட்சி அமைக்க முடியாது என்றும் அது தான் தற்போதைய நிலை என்றும் மல்லிகார்ஜூன கார்கே கூறினார்.
ஐந்து மாநிலங்களில் ஆட்சியை கைப்பற்ற அனைத்து கட்சியினரும் முயற்சி செய்கிறார்கள் என்றும் பாஜகவும் முயற்சி செய்வதாகவும் கூறினார். பிரதமர் தனது பெயரை முன்வைத்து ஓட்டு கேட்பதாகவும் மத்திய பிரதேசத்திற்கு அவர் சென்றது சிரிப்பை ஏற்படுத்தும் வகையில் இருப்பதகாகவும் மல்லிகார்ஜூன கார்கே கூறினார்.
மேலும், மோடிக்கு வாக்களியுங்கள் என்று கூறும் அவர் தனது கட்சியின் பெயரையோ, முதலமைச்சரின் பெயரையோ கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை என்றும், அதுவே அவரது இமேஜை படுதோல்வி அடைவதை காட்டுவதாகவும் காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறினார்.
நவம்பர் மாதம் 17ஆம் தேதி மத்திய பிரதேசத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அம்மாநிலத்தில் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற பாஜக முயற்சித்து வருகிறது. அதேபோல் சத்தீஸ்கரில் நவம்பர் 7 மற்றும் 17ஆம் தேதி இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகின்றன. ஏற்கனவே சத்தீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சி உள்ளது குறிப்பிடத்தக்கது.
ராஜஸ்தானில் நவம்பர் 25ஆம் தேதியும், மிசோரத்தில் நவம்பர் 7ஆம் தேதி தெலங்கானாவில் நவம்பர் 30 ஆம் தேதியும் சட்டமன்ற தேர்தல் நடத்தப்பட உள்ளன. அடுத்தடுத்து 5 மாநில தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேசிய மற்றும் மாநில கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.
இதையும் படிங்க : Telangana Assembly election : பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சர்ச்சை பேச்சு எம்.எல்.ஏ. ராஜா சிங்கிற்கு மீண்டும் வாய்ப்பு!