டெல்லி : காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியத் தலைவராக மல்லிகார்ஜூன கார்கே பொறுப்பேற்ற நிலையில், இரண்டாவது மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றி உள்ளது.
காந்தி குடும்பத்தின் மீது இருந்த அதிருப்தி காரணமாக சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் காந்தி குடும்பத்தைச் சாராத ஒருவரை அடுத்த காங்கிரஸ் தலைவராக நியமிப்பதற்கான தேர்தல் கடந்த ஆண்டு நடைபெற்றது.
சசி தரூர், மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோரிடம் பயங்கர போட்டி நிலவிய போதிலும், இறுதி மோதலில் மல்லிகார்ஜூன கார்கே கட்சித்தலைவர் பதவியைத் தட்டிச் சென்றார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 26ஆம் தேதி, அகில இந்திய காங்கிரஸ் தலைவராக மல்லிகார்ஜூன கார்கே பதவியேற்றுக் கொண்டார்.
தற்போது காங்கிரஸ் கட்சியின் அதிர்ஷ்டக்கார தலைவராக மல்லிகார்ஜூன கார்கே விளங்குகிறார். அவர் பதவியேற்ற ஆறு மாத காலத்தில் இமாச்சலப் பிரதேசத்தில் நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. கள நிலவரத்தைப் புரிந்து கொண்டு அதற்கு ஏற்றார்போல், பொறுப்பாளர்களை நியமிப்பது, தேர்தல் அறிக்கையில் கவனம் செலுத்தியது உள்ளிட்ட காரணங்களால் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் கடந்த டிசம்பர் மாதம் 8ஆம் தேதி காங்கிரஸ் கட்சி இமாச்சலப் பிரதேசத்தில் ஆட்சியைக் கைப்பற்றியது.
தற்போது 8 மாத இடைவெளியில், கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய வெற்றியை மல்லிகார்ஜூன கார்கே பெற்று தந்து உள்ளார். தனது சொந்த மாநிலமான கர்நாடகா முழுவதும் பிரசாரம் செய்தது மட்டுமல்லாமல், கடந்த ஒரு மாதமாக தென் மாநிலத்தில் மல்லிகார்ஜூன கார்கே முகாமிட்டு அரசியல் நகர்வுகளை உன்னிப்பாக கவனித்து, அதற்கு ஏற்ற வகையில் காய்களை நகர்த்தி வந்தார்.
மாநில காங்கிரஸை வலுப்படுத்தும் நேரத்தில், மூத்த தலைவர்கள் டி.கே. சிவகுமார், மற்றும் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா ஆகியோரிடையே அரசியல் மோதல்களை சமாளிப்பது, மல்லிகார்ஜூன கார்கேவுக்கு கவுரப் பிரச்சினையாகவே இருந்தது. இருப்பினும் அதில் வெற்றி கண்டு கர்நாடக மாநிலத்தை காங்கிரஸ் வசமாக்கி உள்ளார்.
அந்த வகையில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவின் செயல்பாடுகள் சீரிய அளவில் இல்லை எனக் கூறப்படுகிறது. அவரது சொந்த மாநிலமான இமாச்சலப் பிரதேசத்தில் பாஜக தோல்வியைத் தழுவியது, அந்த கட்சிக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. 2024ஆம் ஆண்டு மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் காங்கிரஸ் கட்சி நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள உள்ள நிலையில், அதிலும் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்துவார் எனக் கூறப்படுகிறது.
அதேநேரம் இந்துத்துவா கொள்கைகளைக் கொண்டு தேர்தல் வெற்றிகளை குவித்து வந்த பாஜகவுக்கு, இது பெரும் அடியாகும். தேர்தல் வியூகங்களை பாஜக ஆராய தவறும்பட்சத்தில் அந்த கட்சிக்கு நாடாளுமன்றத் தேர்தலில் பெரும் பின்னடைவு ஏற்படக் கூடும் எனக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க : Karnataka முதலமைச்சர் யார்? என்ன நடக்கிறது - முழுப் பின்னணி!