2008ஆம் ஆண்டு நடந்த மாலேகான் குண்டுவெடிப்பு தொடர்பான வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பாஜக மக்களவை உறுப்பினர் பிரக்யா சிங் தாகூர், லெப்டினன்ட் கர்னல் பிரசாத் புரோகித் உள்ளிட்ட ஏழு பேர், டிசம்பர் மூன்றாம் தேதி ஆஜராக தேசிய புலனாய்வு முகமை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கை தேசிய புலனாய்வு முகமை விசாரித்துவருகிறது. இந்நிலையில், குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்ட குடும்பத்தார் தாக்கல் செய்த மனுவைத் தொடர்ந்து, குற்றம்சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த மனுவை விசாரித்த சிறப்பு அரசு தரப்பு வழக்கறிஞர் அவினாஸ் ரசல், "விசாரணையை விரைந்து முடிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.
ஆனால், சாட்சிகளை தேடி கண்டுபிடிக்க வேண்டும். அது கடினமான செயல். குற்றம்சாட்டப்பட்டவர்களின் தரப்பில் நீதிமன்றத்தில் ஆஜராகும் வழக்கறிஞர்கள், ஏதாவது காரணம் சொல்லி வழக்கை ஒத்திவைக்க தொடர்ந்து கோரிக்கை விடுத்துவருகிறார்கள்" என்றார்.
கடந்த 2018ஆம் ஆண்டு, பிரக்யா சிங் தாகூர், லெப்டினன்ட் கர்னல் பிரசாத் புரோகித் உள்ளிட்ட ஏழு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 400 சாட்சியாளர்களில் 140 சாட்சியளர்களிடம் ஏற்கனவே விசாரணை நடத்தப்பட்டுவிட்டதாக என்ஐஏ தெரிவித்துள்ளது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஓய்வுபெற்ற காரணத்தாலும் பெருந்தொற்று சூழலாலும் வழக்கின் விசாரணை தாமதமானதாக என்ஐஏ தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.