பீஜிங் : பிரதமர் மோடி கடந்த ஜனவரி 2ஆம் தேதி 2 நாள் பயணமாக லட்சத்தீவு சுற்றுப்பயணம் மேற்கொண்ட நிலையில், தனது பயண அனுபவங்கள் குறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டார். பிரதமர் மோடியின் பதிவுக்கு மாலத்தீவு அமைச்சர்கள் அவதூறு கருத்துகளை பதிவிட்டனர். மாலத்தீவு அரசின் அமைச்சர்கள் மல்ஷா ஷரீப், மரியம் ஷியூனா மற்றும் அப்துல்லா மஹ்சூம் மஜித் வெளியிட்ட அவதூறு கருத்து சர்ச்சையை கிளப்பியது.
இதையடுத்து பிரதமர் மோடிக்கு ஆதரவாகவும், மாலத்தீவு அமைச்சர்களுக்கு எதிராகவும் பலர் சமூக வலைதளங்களில் போர்க் கொடி தூக்கத் தொடங்கினர். இதையடுத்து, பிரதமர் மோடி குறித்து அவதூறு கருத்து வெளியிட்ட அமைச்சர்கள் மல்ஷா ஷரீப், மரியம் ஷியூனா மற்றும் அப்துல்லா மஹ்சூம் மஜித் ஆகியோரை இடைநீக்கம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மாலத்தீவு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், 3 அமைச்சர்களின் கருத்து தனிப்பட்ட கருத்துகள் என்றும் அது அரசு சார்ந்தது இல்லை என்றும் மாலத்தீவு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், மாலத்தீவை புறக்கணிக்கத் தொடங்கிய இந்திய மக்கள், அங்கு சுற்றுலா செல்ல மேற்கொண்டு இருந்த அனைத்து திட்டங்கள் மற்றும் முன்பதிவுகளை ரத்து செய்தனர்.
அதேபோல் பிரதமர் மோடிக்கு ஆதரவாக பிரபல தனியார் சுற்றுலா போக்குவரத்து நிறுவனங்களும் மாலத்தீவை ஊக்குவிக்கும் செயல்களை இனி பின் தொடரப்போவதில்லை என அறிவித்தன. இதனால் மாலத்தீவு அரசுக்கு பொருளாதார நெருக்கடியும், இந்தியாவுடனான நட்புறவில் கடுமையான விரிசலும் ஏற்பட்டது.
இந்த பிரச்சினைகளுக்கு நடுவே சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் அழைப்பை ஏற்று மாலத்தீவு அதிபர் முகமது முய்சு சீனா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில், இந்தியாவுடனான உறவில் ஏற்பட்டு உள்ள விரிசலால் உருவாகி உள்ள பொருளாதார நெருக்கடிகளை சீரமைக்க கூடுதலாக சுற்றுலா பயணிகளை மாலத்தீவுக்கு அனுப்பி வைக்குமாறு அதிபர் முகமது முய்சு சீனாவை வலியுறுத்தியதாக தகவல் கூறப்பட்டு உள்ளது.
5 நாள் பயணமாக சீனா சென்று உள்ள முகமது முய்சு, புஜியன் மாகாணாத்தில் நடைபெற்ற மாலத்தீவு வணிக மன்றத்தின் கூட்டத்தில் உரையாற்றினார். கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் சீனா மேற்கொண்டு வரும் பெல்ட் அண்ட் ரோடு வணிக வழித்தடத்திற்கான முயற்சிகள் குறித்து முகமது முய்சு உரை நிகழ்த்தினார்.
கரோனா காலக்கட்டத்திற்கு முன் மாலத்தீவுன் முதன்மை வணிக மையமாக சீனா விளங்கியதாகவும் அந்த நிலையை மீண்டும் நிறுவ விரும்புவதாகவும் முகமது முய்சு கூறினார். தொடர்ந்து அதிகளவில் சீனா சுற்றுலா பயணிகள் மாலத்தீவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை சீரமைக்க உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
முன்னதாக மாலத்தீவு அதிபர் முகமது முய்சு தனது சீன பயணத்தை நிறைவு செய்து விட்டு ஜனவரி மாத இறுதியில் இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியானது. இது குறித்து மாலத்தீவு அதிபர் மாளிகை, இந்திய வெளியுறவு அமைச்சகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் பரவியது. இருப்பினும் இதுகுறித்து மத்திய வெளியுறவு அமைச்சகம் உறுதிபடுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : மாலத்தீவு அதிபர் முகமது முய்சு இந்தியா வருகை? சமாதானமா? சண்டையா?