டோக்கியோ : கடந்த ஜனவரி 1ஆம் தேதி உலகமே புத்தாண்டை கொண்டாடிக் கொண்டு இருந்த நிலையில், ஜப்பானை சக்திவாய்ந்த நில நடுக்கம் தாக்கி, கோர விளைவுகளை ஏற்படுத்தியது. ரிக்டர் அளவு கோளில் 7 புள்ளி 5 ஆக பதிவான நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
10 மீட்டர் உயரத்திற்கு மேலாக அலைகள் வீசிய நிலையில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் புகுந்தது. கடல் நீர் சூழந்த பகுதிகள் மற்றும் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டவர்களை மீட்கும் பணியில் அரசு தீவிரமாக களமிறங்கியது. மோசமான வானிலை மற்றும் தொடர் பனிப் பொழிவு காரணமாக மீட்பு பணிகளில் கடும் தொய்வு ஏற்பட்டது.
இந்த கோர இயற்கை பேரிடரில் ஏறத்தாழ 200 பேர் வரை உயிரிழந்ததாக அந்நாட்டு அரசு தெரிவித்து உள்ளது. நிலநடுக்கம் தனது கோர பார்வையால் தீண்டியதில் இருந்தே வெளிவர முடியாமல் தவித்து வரும் ஜப்பானுக்கு அடுத்த பேரிடியாக மீண்டும் நிலநடுக்கம் தாக்கியது. மத்திய ஜப்பான் பகுதியில் புதிய நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஜப்பான் கடற்பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோளில் 6 ஆக பதிவானதாக அந்நாட்டு அரசு தெரிவித்து உள்ளது. புத்தாண்டு நேரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்ட அதே இடத்தில் தற்போது இரண்டாவது முறையாக நிலநடுக்கம் தாக்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்ட போதிலும், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதிகம் பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க : மாலத்தீவு அதிபர் முகமது முய்சு இந்தியா வருகை? சமாதானமா? சண்டையா?