ஹைதராபாத்: இந்தியாவின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம், இருசக்கர வாகனங்கள், கார்கள் போன்றவற்றை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் குறிப்பாக SUV கார்கள் விற்பனையில் முன்னணியில் உள்ளது. இந்தியாவைத் தலைமையிடமாகக் கொண்ட இந்த நிறுவனம் வாகனங்களை உற்பத்தி செய்து பல்வேறு வெளிநாடுகளிலும் விற்பனை செய்து வருகிறது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கடந்த சில ஆண்டுகளாக மின்சார வாகனங்களின் புழக்கம் அதிகரித்து வருகிறது. பல ஆட்டோமொபைல் நிறுவனங்கள், தங்களது பிரத்யேகமான வாகனங்களை மின்சார வாகனங்களாக அறிமுகப்படுத்தி வருகின்றன. அந்த வகையில், இந்தியாவின் முன்னனி SUV கார்கள் உற்பத்தியாளரான மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனமும் மின்சார வாகனங்களை உற்பத்தி செய்து அறிமுகப்படுத்தி வருகிறது. பல ஆயிரம் கோடி ரூபாயை இந்த மின்சார வாகன உற்பத்தியில் முதலீடு செய்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு புதிய ScorpioN Pickup Truck-ஐ வெளியிட்டது.
மேலும், அதன் புதிய எலக்ட்ரிக் கார்களை பிரிட்டன் மற்றும் ஐரோப்பாவில் விரைவில் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த Born Electric Vehicles வகையில், மஹிந்திரா தார்-இ (Mahindra Thar-e) கார் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இந்த தார்-இ மாடல் கார் தென்னாப்பிரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த எலக்ட்ரிக் தார் மாடல் கார், ஏற்கனவே உள்ள XUV300 மாடலை தழுவி உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தார்-இ மாடல் கார் உலகளவில் கார் விரும்பிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த நிலையில், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் தனது புதிய எலக்ட்ரிக் கார்களை தனித்துவமாக அடையாளப்படுத்தும் விதமாக பிராண்ட் லோகோவை வெளியிட்டுள்ளது. இது மஹிந்திரா எலக்ட்ரிக் எஸ்யூவி கார்களைக் குறிக்கும் பிரத்யேக லோகோ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பிராண்டை பிரபலப்படுத்தும் வகையில், "Le Chalaang" என்ற கலக்கலான ஆன்த்தம் பாடலையும் மஹிந்திரா நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த பாடலுக்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். இந்தி, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் இந்த பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. சினிமா பாடல் அளவிற்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ள இப்பாடல் யூடியூபில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பாடலில் சவுண்ட் எபெக்ட்ஸுக்காக பல்வேறு அதிநவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஏ.ஆர்.ரகுமான் இசையில் ’செஸ் ஒலிம்பியாட் - 2022’ முழுப் பாடல் வெளியீடு