தானே: மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் உள்ள பழைய பொருட்கள் குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இந்த குடோனில் உள்ள கழிவு பைகளை ரசாயனம் கொண்டு இருவர் தூய்மைப்படுத்திக் கொண்டு இருந்துள்ளனர். இதில் ஒருவர் பீடி குடித்துக் கொண்டு இருந்த நிலையில், எதிர்பாராத விதமாக பீடியில் இருந்த கங்கு அருகில் இருந்த ரசாயன டிரம்மில் விழுந்ததாக கூறப்படுகிறது.
கங்கு விழுந்த நொடியில் ரசாயன டிரம் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் தூய்மை பணியில் ஈடுபட்ட இருவரும் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தனர். ரசாயன டிரம் வெடித்து சிதறியதில் ஏற்பட்ட அதிர்வு அருகில் உள்ள கட்டடங்களில் உணரப்பட்டதாக கூறப்படுகிறது. டிரம்மில் மூலம் ஏற்பட்ட தீ கட்டடம் முழுவதும் பரவியது.
சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் நீண்ட போராட்டத்திற்கு பின் தீயை அணைத்தனர். இரு தொழிலாளர்களின் சடலம் கைப்பற்றப்பட்ட நிலையில், விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து நடந்த பிவாண்டி பகுதியில் அடிக்கடி இது போன்ற தீ விபத்து நிகழ்வதாக அதிகாரிகள் கூறினர்.
அடுத்தடுத்து உள்ள பழைய பொருட்கள் குடோன்கள், கடைகள் காரணமாக தீ விபத்து ஏற்படுவதாகவும், கடந்த 30 நாட்களில் மட்டும் 10 தீ விபத்து சம்பவங்கள் நிகழ்ந்ததாக தீயணைப்பு துறை அதிகாரிகள் கூறினர்.
இதையும் படிங்க: "குரங்கு பொம்மை" இயக்குநர் படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி!