பால்கர்: மகாராஷ்டிரா மாநிலம், நலசோபாராவைச் சேர்ந்த ஜதின் பவார், சுபம் வர்மா ஆகிய இருவரும், அதே பகுதியில் ஸ்டேஷனரி வைத்திருக்கும் ஜிக்னேஷ் கோபானி(50) என்பவரிடம் பணம் பறிக்கத்திட்டமிட்டுள்ளனர். அதன்படி, தாங்கள் இருவரும் மாநில அரசின் இ-சேவை மைய கிளையைத் தொடங்கப்போவதாகவும், அதில் ஜிக்னேஷையும் பங்குதாரராக சேர்த்துக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளனர்.
அதற்காக ஒரு லட்சம் ரூபாயைக் கேட்டுள்ளனர். இதை நம்பிய ஜிக்னேஷ், அவர்களுக்குப் பணத்தைக் கொடுத்துள்ளார். இ-சேவை மையத்தை விரைவில் தொடங்கி விடுவோம் என்று கூறி, பல சமயங்களில் கொஞ்சம் கொஞ்சமாக ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் பணம் வாங்கியுள்ளனர்.
சில நாட்கள் கழித்து, இ-சேவை மையத்தின் உரிமையைப் பெறுவதற்கு கட்டணம் செலுத்திவிட்டதாகக் கூறி, ஒரு ரசீதை ஜிக்னேஷிடம் கொடுத்துள்ளனர். அந்த ரசீது சந்தேகப்படும்படியாக இருந்தது. அதில் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவின் கையெழுத்து மற்றும் சீல் ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டிருந்தது.
அது போலி என அறிந்த ஜிக்னேஷ் இதுகுறித்து போலீசில் புகார் அளித்தார். அவர்கள் மொத்தம் 1 கோடியே 31 லட்சம் ரூபாயை தன்னிடமிருந்து மோசடியாக பறித்துள்ளதாகப் புகாரில் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், மோசடியில் ஈடுபட்ட இருவரையும் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: தந்தையைப்பின்பற்றி தாயைத்தாக்கும் சிறுவன்... குடும்ப வன்முறையின் கோர முகம்!