மும்பை (மகாராஷ்டிரா): சீரம் இந்தியா நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர், மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவிடம் மே 20ஆம் தேதிக்கு மேல் 1.5 கோடி டோஸ் கோவிஷீல்ட் தடுப்பூசி வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.
கோவிட்-19 தொற்று பரவல் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய மாநில சுகாதாரத் துறை அமைச்சர் ராஜேஷ் டோபே, 'மே 20ஆம் தேதிக்கு மேல் 1.5 கோடி டோஸ் கோவிஷீல்ட் தடுப்பூசி மாநிலத்திற்கு கிடைக்கும். அதையடுத்து, 18 - 44 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கும்.
தற்போது, தடுப்பூசி செலுத்திக் கொள்ள 18 - 44 வயதுடையவர்கள் பதிவு செய்ய இயலாது. தற்காலிகமாக அப்பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி தட்டுபாடே இதற்கு காரணம். புதிய டோஸ்கள் கிடைத்தவுடன், 18 - 44 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்படும்.
மாநிலத்தில் புதிதாக 46,781 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 58,805 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். 816 பேர் நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.