மும்பை : மகாராஷ்டிர அரசியலில் காங்கிரஸ் கட்சியின் நம்பிக்கைக்கு பாத்திரமாக அறியப்பட்டவர் முரளி தியோரா. இவரது மகன் மிலிண்ட் தியோரா, முன்னாள் மக்களவை எம்.பியாகவும், மகாராஷ்டிரா காங்கிரசில் பொறுப்பிலும் இருந்து வந்தார். இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறூப்பில் இருந்து விலகுவதாக மிலிண்ட் தியோரா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், "இன்று எனது அரசியல் பயணத்தில் குறிப்பிடத்தக்க அத்தியாத்தை நிறைவுக்கு கொண்டு வந்து உள்ளேன். காங்கிரஸ் கட்சியில் இருந்து அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகுகிறேன். காங்கிரஸ் குடும்பத்தினுடனான எனது 55 ஆண்டுகால உறவு நிறைவுக்கு வருகிறது. இத்தனை ஆண்டுகள் எனக்கு ஆதரவு அளித்து வந்த நண்பர்கள், தன்னார்வலர்கள், தலைவர்கள் என அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று அவர் பதிவிட்டு உள்ளார்.
மிலிண்ட் தியோரா விரைவில், மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவ சேனா கட்சியில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மணிப்பூரில் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நியாய யாத்ரா தொடங்குவதற்கு முன்னதாக வெளியான இந்த அறிவிப்பால் மாநிலம் காங்கிரசில் ஆட்டம் கண்டு உள்ளதாக கூறப்படுகிறது. முன்னாள் காங்கிரஸ் தலைவர் முரளி தியோராவின் மகனான மிலிண்ட் தியோரா கடந்த 2004 மற்றும் 2009 நாடாளுமன்ற தேர்தலில் மும்பை தெற்கு பகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : இந்திய எதிர்ப்பு அரசியல் - மாலத்தீவு அதிபருக்கு பேரிடி! சொந்த தொகுதி தேர்தலில் தோல்வி!