ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் வீட்டில் வேலை செய்த பழங்குடியினப் பெண்ணை காட்டுமிராண்டித்தனமாக தாக்கிய வழக்கில், பாஜக பிரமுகர் சீமா பத்ரா கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்தைத்தொடர்ந்து சீமா பத்ரா பாஜகவிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
பாதிக்கப்பட்ட பெண்மணி சுனிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து சுனிதா செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அப்போது, வீட்டு வேலைகளில் தவறு செய்யும்போதெல்லாம், சீமா பத்ரா தன்னை தாக்குவார் என்றும், ஊடகங்களில் வெளியான அனைத்து தகவல்களும் உண்மைதான் என்றும்; தனக்கு அவ்வளவு கொடுமைகள் நடந்தன என்றும் சுனிதா தெரிவித்தார்.
பட்டியலின பழங்குடி மக்களுக்கு எதிரான இதுபோன்ற நடவடிக்கைகளை பாஜக ஒருபோதும் பொறுத்துக் கொள்ளாது என்று ஜார்க்கண்ட் மாநில பாஜக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்தக்குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், குழுவின் அறிக்கைப்படி சீமா பத்ரா மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இதுபோன்ற நபர்களுக்கு பாஜகவில் இடமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே தன் மீதான குற்றங்கள் அனைத்தும் பொய்யானவை என்றும், அரசியல் நோக்கத்தில் தன்னை இதில் சிக்க வைத்துள்ளார்கள் என்றும் சீமா பத்ரா தெரிவித்தார்.
இதையும் படிங்க: பழங்குடியின வேலைக்காரப்பெண்ணை கொடூரமாக தாக்கிய பாஜக பெண் பிரமுகர் கைது