திருவனந்தபுரம்: கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் ஆலுவா பகுதியைச் சேர்ந்த தம்பதி ராஜேஸ்வரன்-ஸ்மிஜா. இவர்கள் லாட்டரி சீட்டு விற்பனை செய்துவருகின்றனர். இந்தத் தம்பதியினர் இன்று உலகம் முழுவதும் அறியப்பட்டனர் என்றே கூற வேண்டும்.
ஏனெனில், தொழிலில் நேர்மைதான் முக்கியம் என்ற கொள்கையுடன் செயல்பட்ட இவர்கள், லாட்டரி சீட்டில் ஆறு கோடி ரூபாய் கிடைக்க வாய்ப்பிருந்தும், அதனை உரிய நபரிடம் சென்று ஒப்படைத்துள்ளனர்.
அதாவது, ஆலுவா பகுதியைச் சேர்ந்த பி.கே. சந்திரன் என்றவர் ஸ்மிஜாவிடம், "லாட்டரி சீட்டு ஒன்று வேண்டும், அதற்கான பணத்தைப் பின்னர் தருகிறேன். லாட்டரி டிக்கெட்டின் எண்ணை மட்டும் எனக்கு அனுப்பிவையுங்கள்" என்று கூறியுள்ளார். இதையடுத்து, ஸ்மிஜாவும் அவருக்கு SD-316142 என்ற லாட்டரி சீட்டின் எண்ணை அனுப்பியுள்ளார்.
இந்த லாட்டரி சீட்டானது தற்போது ஆறு கோடி மதிப்பிலான பம்பர் பரிசுத் தொகையை வென்றுள்ளது. இருப்பினும், இந்த டிக்கெட் இதுவரை உரியவரிடம் சென்று சேராமலேயே இருந்துள்ளது.
இதையறிந்த டிக்கெட் விற்பனையாளர் ஸ்மிஜா, பி.கே. சந்திரனைத் தொடர்புகொண்டு, தாங்கள் பதிவுசெய்த டிக்கெட் ஆறு கோடி பரிசு பெற்றிருப்பதாகவும், அதனைக் கொண்டு பரிசுத் தொகையைப் பெற்றுக்கொள்ளுமாறும் கூறியுள்ளார். ஸ்மிஜாவின் இந்தச் செயல், நேர்மைக்கு அடையாளமாக இருக்கிறது என அனைவரும் அவரைப் புகழ்ந்துவருகின்றனர்.