டெல்லி : திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா மீதான லஞ்சப் புகார் குறித்த விசாரணைக்கு வரும் அக்டோபர் 26ஆம் தேதி ஆஜராகுமாறு பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே மற்றும் வழக்கறிஞர் ஜெய் ஆனந்த் தேஹாத்ராய் ஆகியோருக்கு மக்களவை ஒழுங்கு நடவடிக்கைக் குழு சம்மன் அனுப்பி உள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு முதல் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா, மக்களவையில் கேள்வி எழுப்பிய 60 கேள்விகளில் 50க்கு மேற்பட்ட கேள்விகளுக்கு லஞ்சம் வாங்கியதாகவும், அதில் அதானி விவகாரம் தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு ஹிராநந்தனி குழுமத்திடம் பணம் வாங்கியதாகவும் பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே குற்றம்சாட்டினார்.
மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தக் கோரி மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு, பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே கடிதம் எழுதினார். அதேநேரம், இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தக் கோரி சிபிஐக்கு வழக்கறிஞர் ஜெய் ஆனந்த் தேஹாத்ராய் புகார் அளித்தார். ஹிராநந்தினி குழுமத்தின் தலைவர் தர்சன் ஹிராந்ந்தினி - மஹுவா மொய்த்ரா இடையிலான பணப் பரிவர்த்தனை குறித்த ஆதாரங்கள் இருப்பதாக வழக்கறிஞர் ஜெய் ஆனந்த் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
நாடாளுமன்ற உறுப்பினர் என்ற பட்சத்தில் தனக்கு வழங்கப்பட்ட அரசு வசதிகளை மஹுவா மொய்த்ரா சட்டத்திற்கு புறம்பாக பயன்படுத்தியதாகவும் புகாரில் கூறப்பட்டது. இதனிடையே தன் மீதான ஊழல் புகார் குறித்து சிபிஐ விசாரணை நடத்தலாம் என்றும், அதற்கு முன் அதானி விவகாரத்தில் சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வதை எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் மஹுவா மொய்த்ரா தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்தார்.
பாஜக எம்.பி நிஷிகாந்த் துபே அளித்த புகார் கடிதத்தை மக்களவை ஒழுங்கு நடவடிக்கை குழுவுக்கு அனுப்பி வைத்த சபாநாயகர் ஓம் பிர்லா, அது குறித்து விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டார். இந்நிலையில், வரும் அக்டோபர் 26ஆம் தேதி திரிணாமுல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மஹுவா மொய்த்ரா மீதான லஞ்சப் புகாரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு மக்களவை ஒழுங்கு நடவடிக்கை குழு பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே மற்றும் வழக்கறிஞர் ஜெய் ஆனந்த் தேஹாத்ராய் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி உள்ளனர்.
இதையும் படிங்க : தீபாவளி போனஸ்; மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்!