தாமஸ் கோப்பைத்தொடரில், இந்திய ஆடவர் அணி இறுதிப்போட்டியில் 14 முறை சாம்பியனான இந்தோனேஷியாவை எதிர்கொண்டது. இந்தோனேஷியாவை வீழ்த்துவது கடினம் என வல்லுநர்கள் கூறிய போதிலும் இந்திய வீரர்கள் திறம்பட விளையாடி முதல் 3 ஆட்டத்திலும் வெற்றி பெற்று தங்கத்தை வென்றனர்.
இது குறித்து கேப்டன் ஸ்ரீகாந்த் கிடாம்பி கூறுகையில், 'சக வீரர்களிடம் நான் எதையும் குறிப்பிட்டு பேசவில்லை; ஏனென்றால் அனைவரும் சிறப்பாகவே விளையாடி வந்தனர். இறுதி வரை போராடுங்கள். ஒருங்கிணைந்து விளையாடுவோம். ஒருவருக்கொருவர் ஆதரவு அளித்து விளையாடுவது முக்கியம் என அறிவுறுத்தினேன்' என்றார்.
தாமஸ் கோப்பை வெற்றிக்கு பிறகு இந்தியாவில் பேட்மிண்டன் மேலும் பிரபலமடைந்துள்ளது என தான் கருதுவதாகவும்; பிரதமர் மோடி முதல் பிரபலங்கள் எங்களை பாராட்டியதும்; கிடைத்த ஆதரவும் மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது எனத் தெரிவித்தார்.
மேலும் அவர், ’அணி வீரர்களின் பிணைப்பு அற்புதமாக இருந்தது; தொடரின் சில ஆட்டங்களில் ஏற்ற இறக்கம் இருந்தபோதிலும் எல்லாவற்றையும் சாதகமாக எடுத்துக்கொண்டே விளையாடினோம்.
கிடைத்த வாய்ப்புகளில் ஒவ்வொரு வீரரரும் சிறப்பான பங்களிப்பை அளித்தார்கள்; தொடருக்கு முன்பாக தனித் திட்டம் என எதையும் தீட்டவில்லை; ஒவ்வொருவரும் தங்களது முழுத் திறனை வெளிப்படுத்தியதாலேயே இந்த வெற்றி சாதகமானது’ எனவும் ஸ்ரீகாந்த் கிடாம்பி குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: டி20 தொடருக்கான இந்திய அணியில் சாஹா தேர்வு செய்யப்படாதது ஏன்? - முன்னாள் தேர்வாளர்கள் அதிருப்தி!