புதுச்சேரி: காங்கிரஸ், திமுக துணையோடு புதுச்சேரியிலிருந்து பல்வேறு இடங்களுக்கு மதுபானம் கடத்துவது தங்கு தடையின்றி நடைபெற்று வருகிறது என அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
புதுச்சேரி அதிமுக கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் இன்று (அக்.4) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், " புதுச்சேரியில் மதுபானம் கடத்தல் அதிகரித்து வருகிறது. காரைக்கால் பகுதியிலிருந்து தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களுக்கு சட்டவிரோதமாக மதுபானம் கடத்தப்படுகிறது. இதற்கு காவல்துறையும் துணை நிற்கிறது. காங்கிரஸ், திமுக துணையோடு மதுபானம் கடத்தல் தங்கு தடையின்றி நடைபெற்று வருகிறது.
புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் போலி மதுபான தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது. அரசு இதில் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதுச்சேரி, தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதால் காவல்துறையினரின் வாகனத் தணிக்கையின் போது போலி மதுபானங்கள் பறிமுதல் செய்யப்படுகிறது. மதுபானக் கடத்தலைத் தடுக்க அரசு காவல்துறை, வருவாய்துறை, உயர் அலுவலர்கள் கொண்ட ஒரு உயர்மட்ட குழு அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
மேலும் பேசிய அவர், “புதுச்சேரியில் உள்ளாட்சி தேர்தலை சந்திக்க தயாராக உள்ளோம். கூட்டணியில் எந்தக் குழப்பமும் இல்லை” என்றார்.
இதையும் படிங்க: டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆய்வு