பெங்களூரு : பசவண்ணர் தோற்றுவித்த லிங்காயத் மதத்தில் ஆண்-பெண் வேறுபாடு கிடையாது. சிவலிங்கத்தை அனைவரும் கழுத்தில் அணிவார்கள். பெண்களுக்கு பூஜை செய்ய அனுமதி உண்டு. மாதவிலக்கு தீட்டு கிடையாது. இந்த மதத்தில் சிவலிங்கமே பிரதான கடவுள். எனினும் இவர்கள் இந்து மதத்தின் பூஜை வேள்ளி உள்ளிட்ட கோட்பாட்டை ஏற்றுக்கொண்டவர்கள் கிடையாது.
இவர்களை "லிங்காயத்" அல்லது வீர சைவ சமய சைவர்கள் என்ற அழைப்பார்கள். இந்த லிங்காயத் சமூகத்தினர் கர்நாடக மாநிலத்தில் அதிகளவில் வசிக்கின்றனர். கர்நாடகாவில் 18 சதவீதம் முதல் 20 சதவீதம் லிங்காயத் சமூகத்தினர் உள்ளனர்.
மாநிலத்தின் உள்ள 224 சட்டசபை தொகுதிகளில், 110க்கும் மேற்பட்ட தொகுதிகளின் வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக லிங்காயத் மக்கள் இருக்கின்றனர். இவர்கள், தங்களை இந்து மதத்திலிருந்து பிரித்து தனி மதமாக அங்கீகரிக்க வேண்டும் என பல நூறு ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதைத்தொடர்ந்து கடந்த 2018ஆம் ஆண்டு கர்நாடக அரசு லிங்காயத் சமூகத்தை தனி மதமாக அங்கீகரித்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியது. இதனை மத்திய அரசுக்கும் அனுப்பி வைத்தது.
இதைத்தொடர்ந்து ஓபிசி அங்கீகாரம் வழங்க வேண்டும் என லிங்காயத் சமூகத்தினர் கோரிக்கை விடுத்தனர். இதுதொடர்பாக கர்நாடக பாஜக அரசு எந்தவித முடிவும் எடுக்கவில்லை. இந்த நிலையில், அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் வரவுள்ளதால், லிங்காயத் சமூகத்தினர் தங்களது கோரிக்கைகள் தொடர்பாக, கர்நாடக அரசின் மீதான பிடியை இறுக்குகின்றனர்.
தங்களை ஓபிசி பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்காவிட்டால், மாபெரும் போராட்டம் நடத்துவோம் என்றும் லிங்காயத் சமூகத்தினர் எச்சரித்துள்ளனர். தேர்தல் நேரத்தில் இந்த பிரச்சினை பாஜக அரசுக்கு சிக்கலாக மாறியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். பாஜக ஒருவேளை லிங்காயத்துகளின் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால், காங்கிரஸ் அந்த வாய்ப்பை பயன்படுத்தி வாக்குகளை பெற்றுக் கொள்ளும் என்றும் கூறுகின்றனர்.
இதையும் படிங்க: காங்கிரஸ் விரும்புவது ஒரே இந்துஸ்தான்- ராகுல் காந்தி