கர்நாடகா: பாஜக ஆளும் கர்நாடக மாநிலத்தில் வரும் மே மாதம் 10ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. வேட்பு மனுதாக்கல் நிறைவடைந்துள்ளது. முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, கடந்த 15ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்தார். கர்நாடகாவில் வெற்றியைத் தீர்மானிக்கும் பெரும்பான்மை சமூகமாக லிங்காயத் சமூகம் உள்ளது. இதனால், சட்டப்பேரவைத் தேர்தலில் லிங்காயத்துகளுக்கு அதிக இடங்கள் வழங்கப்பட்டுள்ளன.
அதேநேரம், லிங்காயத்துகளிடையே பாஜகவுக்கு இருக்கும் ஆதரவை குலைக்கும் வகையில், பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறது. இதனிடையே லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்த ஜெகதீஷ் ஷெட்டர் உள்பட இரண்டு பாஜக தலைவர்கள் காங்கிரஸில் இணைந்ததால், பாஜகவினர் சற்று கலக்கமடைந்துள்ளனர்.
இந்த நிலையில், லிங்காயத் சமூக தலைவர்கள் கூட்டம், முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவின் வீட்டில் நேற்று(ஏப்.19) நடைபெற்றது. இதில், முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, மூத்த தலைவர் வி.சோமண்ணா, பி.சி.பாட்டீல், அரவிந்த் பெல்லாட் உள்ளிட்ட 23 லிங்காயத் தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்த தேர்தலில் பாஜகவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வர வேண்டும் என்றும், அவ்வாறு ஆட்சிக்கு வந்தால் லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை முதலமைச்சராக்க வேண்டும் என்றும் இக்கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.
லிங்காயத் சமூக வாக்குகள் எக்காரணம் கொண்டும் சிதறக் கூடாது என்றும், ஜெகதீஷ் ஷெட்டர் விலகல் எந்த வகையிலும் வாக்கு வங்கியை பாதிக்காத வகையில் செயல்பட வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டதாக தெரிகிறது. அதேநேரம் பாஜகவுக்கு எதிராக லிங்காயத் சமூகத்தினரைத் திரட்டும் முயற்சியில் காங்கிரஸ் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.