புதுச்சேரி, கோரிமேடு, காமராசர் சாலையில் உள்ள மாரியம்மன் கோயிலில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் தொடங்கி வைத்தார்.
அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, "புதுச்சேரியில் கரோனா தடுப்பூசி போட்டவர்களின் எண்ணிக்கை 80 விழுக்காட்டை தாண்டியுள்ளது. இதுவரை 10,50,000 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.
தடுப்பூசி காரணமாக கரோனா பரவல் அலையிலிருந்து மக்கள் தப்பிக்கின்றனர். உலகத்திலேயே குழந்தைகளுக்கான தடுப்பூசி இந்தியாவில் தான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் 2 வயது முதல் உள்ள குழந்தைகளுக்கு போடப்பட உள்ளது. தடுப்பூசி கண்டுபிடித்த விஞ்ஞானிகளுக்கு பாராட்டுகள்.
புதுச்சேரியில் விரைவில் உள்ளாட்சித்தேர்தல் முடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியதால் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு திரும்பபெறும் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
சட்டப்பேரவை உறுப்பினர்களின் கோரிக்கையை தொடர்ந்து சட்ட வல்லுநர்களை வைத்து அதற்கான விவாதம் நடைபெற்று வருகிறது. பிற்படுத்தபட்டவர்களுக்கு இடதுக்கீடு வழங்கப்படும். சட்டத்திற்கு உள்பட்டு எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என ஆராயப்பட்டு வருகிறது. பிற்படுத்தபட்டவர்களுக்கு ஆதரவாக உள்ளோம். அதில் எந்த குழப்பமும் வேண்டாம்"என்றார்.
இதையும் படிங்க: ‘மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக செயல்படுங்கள்’ - தமிழிசை