புதுச்சேரி இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் தடுப்பூசி முகாமை துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கிவைத்தார்.
பின்னர் அங்கு செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அவர், பக்கத்து மாநிலத்தில் கரோனா தொற்று அதிகரித்துஉள்ளது. எனவே புதுச்சேரியில் மிக கவனம் செலுத்த உள்ளோம். இதற்காகப் புதுச்சேரியில் 100 இடங்களில் கரோனா பரிசோதனை செய்ய உள்ளோம். பொதுமக்கள் தயங்காமல் வந்து பரிசோதனை செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து பேசிய அவர், "புதுச்சேரியில் அனைவரும் முகக்கவசம் அணிந்துகொண்டு செல்ல வேண்டும். கார்களில் செல்லும்போதும் முகக்கவசம் கட்டாயமாக அணிய வேண்டும். புதுச்சேரியில் முகக்கவசம் அணியவில்லை என்றால் 100 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
திரையரங்குகளில் 50 விழுக்காட்டினர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். கோயில்களில் 8 மணி வரை மட்டுமே வழிபாடு செய்யலாம். கபசுரக் குடிநீர் மருத்துவமனைகளில் வழங்க ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.
மக்கள் அதிகமாகக் கூட்டம் கூடுவதற்கும், விழாக்கள் நடத்துவதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. பேருந்துகளில் தகுந்த இடைவெளியுடன் பயணிகள் செல்ல வேண்டும்.
100 விழுக்காடு கட்டுப்பாடு என்ற வகையில் 100 இடங்களில் பரிசோதனை, தடுப்பூசி போடப்படவுள்ளது. ஆட்டோக்களில் இரண்டு பேர் மட்டும் செல்ல வேண்டும்.
இரவு 12 மணியிலிருந்து அதிகாலை 5 மணி வரை கரோனா கட்டுப்பாடு நடைமுறையில் இருக்கும். வரும் 11ஆம் தேதிமுதல் இந்த நடைமுறை அமலுக்கு வருகிறது. இது கரோனா பொதுக்கட்டுப்பாடுதான், ஊரடங்கு இல்லை" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'தயக்கத்தை விடுங்க; தடுப்பூசி போட்டுக்கோங்க!' - ப. சிதம்பரம் ட்வீட்