மும்பை: லவ் ஜிகாத்துக்கு எதிராக சட்டம் இயற்ற வேண்டும் என்று மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணிக்கு பாஜக நெருக்கடி கொடுக்கும் நிலையில், இச்சட்டத்தை முதலில் இயற்ற பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தயாரா? என சிவசேனா மூத்தத் தலைவர் சஞ்சய் ராவத் எம்.பி. கேள்வியெழுப்பியுள்ளார்.
லவ் ஜிகாத் விவகாரத்தில் பாஜகவுக்கு கண்டனம் தெரிவித்து சஞ்சய் ராவத் கூறுகையில், “லவ் ஜிகாத்துக்கு எதிரான சட்டத்தை முதலில் பிகாரில் நிதிஷ் குமார் தலைமையிலான அரசு இயற்றட்டும், அதன்பிறகு சிவசேனா யோசிக்கும்” என்றும் தெரிவித்தார்.
மும்பையில் செய்தியாளர்களை சந்தித்த சஞ்சய் ராவத்திடம் பத்திரிகையாளர்கள் லவ் ஜிகாத்துக்கு எதிராக சட்டம் குறித்து கேள்வியெழுப்பினார்கள்.
அதற்கு பதிலளித்த ராவத், “மகாராஷ்டிரா மாநிலத்தில் லவ் ஜிகாத்துக்கு எதிராக ஒரு சட்டத்தை உருவாக்க வேண்டும் என்று பாஜகவினர் கூறிவருகின்றனர். நான் இந்த விஷயம் தொடர்பாக காலை முதலமைச்சர் உத்தவ் தாக்கரேயிடம் பேசினேன். இதில் ஒன்றை கூறிக்கொள்கிறேன்.
பாஜக ஆட்சி செய்யும் உத்தரப் பிரதேசம், மத்திய பிரதேசம் மாநிலங்களில் சட்டம் இயற்றி கொள்ளட்டும். மேலும் பிகாரில் இச்சட்டம் எப்போது வடிவமைக்கப்படும்? இந்தச் சட்டங்களை முழுமையாக படிப்போம், அதன் பின்னர் நாங்கள் யோசிப்போம்” என்றார்.
மேலும், “பாஜகவை குறிப்பிடாமல் நாட்டில் பொருளாதார சுணக்கம், வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு உள்ளிட்ட முக்கிய பிரச்னைகள் உள்ளன. இதில் லவ் ஜிகாத்தான் முக்கிய பிரச்னை என்று அவர்கள் நினைத்தால் தாராளமாக அதனை தூக்கிப் பிடிக்கடடும்” என்றார்.
பிகாரில் நிதிஷ் குமார் தலைமையிலான பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது.
இக்கூட்டணியில் 74 தொகுதிகளுடன் பாஜக முதலிடத்தில் உள்ளது. நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு 43 இடங்கள் மட்டுமே கிடைத்தன. மகா கூட்டணியில் 70 தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் 19 தொகுதிகளில் மட்டுமே வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'காதல் என்பது தனிப்பட்ட விருப்பம்.. காதலும் ஜிகாத்தும் கைக்கோக்க வேண்டாம்'- பெண் எம்.பி.!