மும்பை: பழம்பெரும் பாடலாசிரியரும், கவிஞருமான தேவ் கோலி இன்று உயிரிழந்தார். 81 வயதான பிரபல பாடலாசிரியர் தேவ் கோலி அந்தேரியில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தேவ் கோலி நூறு பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளார். அதில் சல்மான் கான் படத்தின் மய்னே பியார் கியா, ஷாருக்கான் படமான பாசிகர், ஜுத்வா 2, முசாஃபிர், ஷூடவுட் அட் லோகன்வாலா, மற்றும் நானா படேகர் நடித்த டாக்ஸி 9211 ஆகிய படங்களில் பாடல்கள் எழுதியுள்ளார்.
மேலும் சல்மான் கான் மாதுரி திக்ஷித் நடித்த ‘ஹம் ஆப்கே ஹை காவ்ன்’ படத்திலும், அமீர் கான், தேவ்கான், ஜூஹி சாவ்லா ஆகியோர் நடித்த இஷ்க் படத்திலும் பாடல்கள் எழுதியிருந்தார். திருமணம் செய்து கொள்ளாத தேவ் கோலி, அனு மாலிக், ராம் லட்சுமணன், ஆனந்த் ராஜ், மற்றும் ஆனந்த் ஆகிய இசையமைப்பாளருடன் பணியாற்றியுள்ளார்.
தேவ் கோலியின் ’மய்னே பியார் கியா’ படத்தில் ஆதே ஜாதே ஹசதே காதே பாடல், பாசிகர் படத்தின் யே காலி கள்ளி ஆன்கென் ஆகிய பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.. தேவ் கோலியின் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக தெற்கு அந்தேரியில் லோகன்வாலா காம்ப்ளக்ஸில் வைக்கப்பட்டுள்ளது. இன்று தேவ் கோலி இறந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன் பழம்பெரும் பாலிவுட் நடிகை சீமா தியோ உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உயிரிழந்த பாடலாசிரியர் கோலியின் நெருங்கிய நண்பரும் இசையமைப்பாளருமான ஆனந்த ராஜ் கூறூகையில் “நான் 1995அம் ஆண்டு மும்பைக்கு வந்த போது எனக்கு இசையமைப்பில் முதல் வாய்ப்பு கிடைத்தது. அப்போது வங்கியில் கணக்கு தொடங்க தேவ் கோலி உதவி செய்தார். அதற்கு பின் இருவரும் இணைந்து பல திரைப்படங்களில் ஒன்றாக இணைந்து பணிபுரிந்தோம்.” என்றார்
இதையும் படிங்க: பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணின் 26 வார கருவை கலைக்க குஜராத் நீதிமன்றம் அனுமதி!