பாட்னா: ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் தலைவரான லாலு பிரசாத் யாதவ் (74) சிறுநீரக பாதிப்பால் கடும் அவதியடைந்து வந்தார். அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.
இந்நிலையில், சிங்கப்பூரில் வசித்து வரும் லாலுவின் மகள் ரோகினி, தனது சிறுநீரகத்தை தந்தைக்கு வழங்க முன்வந்தார். பரிசோதனை செய்யப்பட்டதில், ரோகினியின் சிறுநீரகம், லாலுவுக்கு பொருந்தியது. இதைத் தொடர்ந்து சிங்கப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த டிசம்பர் மாதம் லாலு அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில், இன்று (பிப்.11) நாடு திரும்புகிறார்.
இதுகுறித்து அவரது மகள் ரோகினி ஆச்சார்யா ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், "நான் லாலுவின் உடல் நிலை குறித்த முக்கியமான விஷயத்தை பகிர்ந்து கொள்கிறேன். அவர் இன்று இந்தியா புறப்படுகிறார். ஒரு மகளாக எனது பணியை செய்துவிட்டேன்.
என் தந்தையின் உடல் நலத்தை பேணி, அவரை உங்களிடம் அனுப்பி வைக்கிறேன். இனி என் தந்தையின் உடல் நலனை நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள்" என உருக்கமாக பதிவிட்டுள்ளர்.
இதுதொடர்பாக ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் செய்தி தொடர்பாளர் சுபோத் குமார், "லாலு பிரசாத் சமூக நீதி மற்றும் புரட்சியின் உருவகம். அவரது வாழ்க்கை துணிச்சலுக்கும், நெகிழ்ச்சிக்கும் எடுத்துக்காட்டு" என கூறியுள்ளார்.
இதையும் படிங்க: பீகார் ரயில்வே திட்டத்துக்கு பட்ஜெட்டில் ரூ.1,000 மட்டும் ஒதுக்கீடா?