டெல்லி: பிகார் மாநில முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் சில நாட்களுக்கு முன்னே அவரது வீட்டு மாடிப்படியில் இருந்து தவறி விழுந்து எலும்பு முறிந்தது. பின்னதாக பாட்னா தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். லாலுவின் உடலில் முன்னேற்றம் ஏற்படாததால், உயர் சிகிச்சை அளிப்பதற்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் புதன்கிழமை (ஜூலை 6) அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார்.
தேஜஸ்வி யாதவ் இந்த தகவலை அவரது ஆதரவாளர்களுக்கு ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அதில், ‘நமது தேசியத் தலைவரும் எனது தந்தையுமான லாலு பிரசாத் ஜியின் உடல்நிலை தொடர்ந்து முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. தீவிர மருத்துவ கண்காணிப்பில் உள்ள அவர் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. அனைத்து நலம் விரும்பிகள், ஆதரவாளர்கள், தொழிலாளர்கள் மற்றும் நாட்டு மக்கள் தவறான செய்திகள் குறித்து கவலைப்பட வேண்டாம்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக லாலு யாதவை சிங்கப்பூருக்கு அழைத்துச் செல்வது குறித்து எய்ம்ஸ் மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. கிரியேட்டினின் அதிகரிப்பால் உடல் நிலை மோசமடைந்ததாக எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்தது. லாலு யாதவின் உடலில் கிரியேட்டினின் அளவு 4இல் இருந்து 6 ஆக அதிகரித்துள்ளது. மேல் சிகிச்சைக்காக சிங்கப்பூருக்கு அழைத்துச் செல்வது குறித்து ஆலோசிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. லாலு யாதவ் மீதான ஊழல் வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:லாலு பிரசாத்துக்கு சொந்தமான இடங்களில் சிபிஐ அதிரடி சோதனை