டெல்லி: மூன்று வேளாண் திருத்தச் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், ஹரியானா, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், டெல்லி போன்ற இடங்களில் விவசாயிகள் கடந்த ஓராண்டாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டக் களத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
இதையடுத்து, கடந்த அக்டோபர் 3ஆம் தேதி உத்தரப் பிரதேச துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மௌரியா லக்கிம்பூர் கெரி அருகே விழா ஒன்றில் கலந்துகொள்ள வந்தார். லக்கிம்பூர் கிராமத்தில் அவருடைய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
விஸ்வரூபம் எடுத்த விவகாரம்
அப்போது, விவசாயிகள் மீது காரை ஏற்றியதில் நான்கு பேர் கொல்லப்பட்டனர். அதைத் தொடர்ந்து எழுந்த வன்முறையில் மேலும் ஒரு செய்தியாளர் உள்பட நான்கு பேர் உயிரிழந்தனர்.
மேலும், விவசாயிகள் மீது ஏறிய காரானது, ஒன்றிய உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவுடையது எனவும் குற்றச்சாட்டு எழுந்தது. அதன் பின்னர், இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது.
சாட்சிகளின் வாக்குமூலங்கள்
நாடு முழுவதும் இவ்விவகாரம் விஸ்வரூபம் எடுக்கவே, ஒன்றிய அமைச்சரின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா உள்பட 13 பேரை உத்தரப் பிரதேச குற்றப்பிரிவு காவலர்கள் கைது செய்தனர்.
இந்நிலையில், இவ்வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, சூர்யகாந்த், ஹிமா கோலி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று (அக்.26) விசாரணைக்கு வந்தது. அப்போது உத்தரப் பிரதேச அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் ஹரீஷ் சால்வே, கரீமா பிரசாத் ஆகியோர் ஆஜராகினர்.
ஹரீஷ் சால்வே, இந்த வழக்கின் சாட்சியங்களின் வாக்குமூலங்களை 164 பிரிவின்படி மாவட்ட நீதிபதி முன்னிலையில் பதிவு செய்து அதை உச்ச நீதிமன்றத்தில் இன்று சமர்பித்தார்.
சரமாரி கேள்வி
இந்நிலையில், இதுகுறித்து உச்ச நீதிமன்றம், "ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராடினார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் நிகழ்வை நேரில் பார்த்த சாட்சியங்கள் வெறும் 23 நபர்கள் மட்டும்தானா?" எனக் கேள்வியெழுப்பினர்.
இதற்கு பதிலளித்த உ.பி., அரசு வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே, "மொத்தம் 68 நபர்களை சாட்சியங்களாக இவ்வழக்கில் சேர்த்துள்ளோம். அதில், 30 நபர்களின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. வாக்குமூலங்கள் அடிப்படையில் 23 நபர்கள் நேரடி சாட்சியங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்" என்றார்.
லக்கிம்பூர் விவகாரத்தில், காணொலி ஆதாரங்களை தடயவியல் பரிசோதனை மூலமும், வல்லுநர்கள் மூலமும் ஆய்வு செய்ய உத்தரப் பிரதேச அரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக, இவ்வழக்கின் சாட்சியங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.
மேலும், செய்தியாளர் கொல்லப்பட்ட வழக்கு உள்பட இரண்டு வழக்குகளில் அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை வரும் நவம்பர் 8ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.