பெங்களூரு: 2020ஆம் ஆண்டு ஹசினா பானு என்பவருக்கு பெங்களூருவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் குழந்தை பிறந்துள்ளது. அப்போது குழந்தையை அடையாளம் தெரியாத நபர் பணத்திற்காகத் திருடி விற்றுள்ளார். இது தொடர்பாக காவல் துறையினர் நடத்திய விசாரணையில் குழந்தை அனுபமா தேசாய் என்பவரிடம் வளர்வதைக் கண்டுபிடித்தனர்.
ஹசினா பானு, கடந்த ஓராண்டாக வளர்ப்புத் தாயான அனுபமா தேசாயிடம் வளர்ந்துவரும் தன் குழந்தையை மீட்டுத் தர வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.
இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் அனுபமா தேசாய் குழந்தையைத் தர மறுத்துவந்துள்ளார். மேலும் ஹசினா பானுக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் உள்ளன. தனக்கு குழந்தை இல்லை என்பதைக் குறிப்பிட்டு குழந்தை தன்னிடமே இருக்க வேண்டும் என்று அனுபமா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
நீதிபதி தீர்ப்பு
இதை ஏற்க மறுத்த நீதிபதி கிருஷ்ண எஸ். தீட்சித், "குழந்தையைப் பெற்ற தாயிடம் ஒப்படைக்க வேண்டும். எண்ணிக்கையின் அடிப்படையில் குழந்தையைப் பிரிக்க முடியாது. குழந்தை தாய்ப்பால் பெறாமல் இருப்பது தீஞ்செயல். நாகரிக சமுதாயத்தில் இதுபோன்று சம்பவம் நடக்கக் கூடாது.
குழந்தைக்குத் தாய்ப்பால் புகட்டுவது தாயின் அடிப்படை உரிமை. அதேபோல் குழந்தை தாய்ப்பால் பெறுவதும் அடிப்படை உரிமை. இந்த இரண்டு உரிமைகளும் இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 21இன்கீழ் வாழ்தலுக்கான அடிப்படை உரிமை ஆகும். குழந்தையைப் பெற்ற தாயிடம் ஒப்படைக்க வேண்டும்" என்று உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: கோடநாடு வழக்கு: விசாரணை ஒத்திவைப்பு