கரோனா வைரசின் அச்சுறுத்தல் சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளையும் பாதித்திருந்தாலும், நாடு முழுவதும் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் ஏழை, எளிய மக்களை அதிகம் பாதித்துள்ளது.
நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவால் தொழிற்சாலைகள், ஆலைகள், வணிக நிறுவனங்கள், சிறு, குறு நிறுவனங்கள், சாலையோரக் கடைகள் என அனைத்தும் மூடப்பட்டன. இதன் காரணமாக தொழிலாளர்கள் கடும் பாதிப்படைந்தனர்.
நாட்டில் தற்போது தொழிற்சாலைகளை இயக்க அனுமதி வழங்கப்பட்டிருந்தாலும், பல நிறுவனங்கள் பொருளாதார வீழ்ச்சி காரணமாக மூடியே கிடக்கின்றன. இதனால், நாள்தோறும் கிடைக்கும் கூலியை வைத்துக்கொண்டு வாழ்வை நகர்த்திவந்த கூலித் தொழிலாளர்கள், தங்களது வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். அத்தியாவசிய உணவுப் பொருள்களை வாங்குவதற்குக்கூட பணமின்றி பட்டினிக்கிடக்கும் நிலை எழுந்துள்ளது.
இந்நிலையில், திருவனந்தபுரத்தில் தங்கி வேலை செய்துவந்த கூலித் தொழிலாளி ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
திருவனந்தபுரத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் 200-க்கும் மேற்பட்டவர்கள் கூலித் தொழிலாளார்களாக வேலை செய்துவந்துள்ளனர். அந்தத் தொழிற்சாலை கடந்த 145 நாள்களாக மூடியே கிடப்பதாகக் கூறப்படுகிறது. அத்தொழிற்சாலையில் பணியாற்றிவந்தவர்கள், அதனை மீண்டும் திறக்கக் கோரிக்கைவிடுத்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
இதனிடையே, நேற்று பிரபுல்லா குமார் (50) என்ற கூலித் தொழிலாளி தன்னுடைய அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
இது குறித்து தொழிற்சாலை நிர்வாகம் காவல் துறைக்குத் தகவல் அளித்தது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பிவைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
தொழிற்சாலை மூடப்பட்ட நிலையில், கூலித் தொழிலாளி உணவுக்குக்கூட வழியின்றி இருந்துள்ளார் என்றும் மன அழுத்தத்தில் இருந்த அவர் தற்கொலை செய்துகொண்டார் என்றும் கூறப்படுகிறது.
நலிவடைந்திருக்கும் கூலித்தொழிலாளர் குடும்பங்களின் வாழ்வாதாரத்தைக் காக்க அரசு முன்வர வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் வேண்டுகோளாக உள்ளது.
இதையும் படிங்க : நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி இலவசம் - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்