ராமநகரா: கர்நாடகாவில் வருகிற மே 10ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் (ஏப்ரல் 20) நிறைவு பெற்றது. இந்த நிலையில், இன்று (ஏப்ரல் 21) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது.
இதில், கர்நாடக காங்கிரஸ் கமிட்டி தலைவர் டி.கே. சிவகுமாரின் வேட்புமனுவை, கனகாபூர் தேர்தல் அலுவலர் ஏற்றுக் கொண்டார். முன்னதாக, கனகாபூர் தொகுதியில் கடந்த ஏப்ரல் 17 அன்று காங்கிரஸ் வேட்பாளராக தனது வேட்புமனுவை தாக்கல் செய்த டி.கே. சிவகுமார், தனது வேட்புமனு நிராகரிக்கப்படுமோ என்ற அச்சத்தில் இருந்தார்.
இதன் காரணமாக, நேற்று தனது சகோதரர் டி.கே. சுரேஷ் வேட்புமனு தாக்கல் செய்தார். ஆனால், அவரது சகோதரரின் வேட்புமனுவும் நிராகரிக்கப்படும் என்ற அச்சத்தில், அவரது மகள் ஐஸ்வர்யாவும் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியானது. மேலும், அவரது சொத்து மதிப்பு அளவுக்கு அதிகமாக இருந்ததே இந்த அச்சத்திற்கு காரணமாக அறியப்படுகிறது. ஏனென்றால், தனது வேட்புமனுவை தாக்கல் செய்த டி.கே. சிவகுமார், 108 பக்கங்கள் கொண்ட தனது சொத்துப் பட்டியலையும் தேர்தல் அலுவலரிடம் சமர்ப்பித்தார்.
இந்த சொத்து அறிக்கையின்படி, டி.கே. சிவகுமாரின் சொத்து மதிப்பு ஆயிரத்து 414 கோடி ரூபாய்க்கு மேல் ஆகும். இதில், அவரது தனிப்பட்ட சொத்து ஆயிரத்து 214 ரூபாய், அவரது மனைவி உஷாவின் சொத்து 133 கோடி ரூபாய் மற்றும் அவரது மகன் ஆகாஷின் சொத்து 66 கோடி ரூபாய் ஆகும். அதேநேரம், 970 கோடி ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துகள், 244 கோடி ரூபாய் மதிப்பிலான பரம்பரை சொத்துகள் மற்றும் 226 கோடி ரூபாய் கடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 23 லட்சம் ரூபாய் மதிப்புடைய ஹூப்ளட் கடிகாரத்தைப் பயன்படுத்தும் டி.கே. சிவகுமார், 14 கோடி ரூபாய் ஆண்டு வருமானமாக பெறுகிறார். 4 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் உள்ளன. கடந்த 2013ஆம் ஆண்டு 252 கோடியாக இருந்த டி.கே. சிவகுமாரின் குடும்ப வருமானம், 2018ஆம் ஆண்டில் 840 கோடி ரூபாயாக உயர்ந்தது. இந்த நிலையில்தான், சொத்து குறித்த அறிக்கையின் அடிப்படையில் சிலரால் பிரச்னை வரக் கூடும் என தகவல் வெளியானது.
இதன் அடிப்படையில், தனது உறவினர்கள் மற்றும் சட்ட ஆலோசகர்கள் உடன் டி.கே. சிவகுமார் ஆலோசனை நடத்தி உள்ளார். அதேபோல், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே, தான் வேட்புமனு தாக்கல் செய்ததாக அவரது சகோதரர் டி.கே. சுரேஷ் கூறியுள்ளார். நான்கு நாட்களுக்கு முன்பு கூட சென்னையில் இருந்து வந்த வருமான வரித் துறையினர் டி.கே. சிவகுமாருக்கு நோட்டீஸ் வழங்கினர் என்றும் டி.கே. சுரேஷ் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: Karnataka Election: காங்கிரஸ் டூ பாஜக.. பாஜக டூ..? நகரும் முக்கிய வேட்பாளர்கள்!