கொல்கத்தா: விசாரணையின் போது குற்றவாளி அல்லது குற்றம் சாட்டப்பட்டவருடன் மென்மையாகப் பேசி நம்பிக்கையைப் பெறுவதற்காகக் கொல்கத்தா காவல்துறை, அமெரிக்கா மற்றும் நெதர்லாந்து காவல்துறை பாணியில் புதிய விசாரணை உத்திகளைப் பின்பற்றத் திட்டமிட்டுள்ளது.
மனித உரிமைகள் ஆணையத்தின் அழுத்தத்தின் கீழ் குற்றவாளிகள் அல்லது குற்றம் சாட்டப்பட்டவர்களை அடிக்கும் நடைமுறை தற்போது இல்லை. ஆனால் குற்றவாளிகள் அல்லது குற்றம் சாட்டப்பட்டவர்களைத் தவறாக நடத்துவது மற்றும் மிரட்டுவது ஆகியவை இந்தியக் காவல்துறையின் முக்கிய ஆயுதங்களில் ஒன்றாக உள்ளது. எனவே இந்த முறையை ஒழிப்பதற்காக வெளிநாட்டுக் காவல்துறையில் பயன்படுத்தும் விசாரணை நுட்பத்தைக் கொல்கத்தா லால்பஜார் காவல்துறை பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் நாட்டில் விசாரணை அமைப்புகளின் கூட்டம் லால்பஜாரில் நடைபெறுகிறது. வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் அல்லது குற்றம் சாட்டப்பட்டவர்களை எப்படி விசாரிக்க வேண்டும் என்பது குறித்து இந்த கூட்டத்தில் முக்கியமாக விவாதிக்கப்படுகிறது.
இதுவரை, கொல்கத்தா காவல்துறையால் குற்றம் சாட்டப்பட்டவர்களை விசாரிக்கும் முறைக்கும், அமெரிக்கக் காவல்துறையினரின் விசாரணை முறைக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளது. எனவே கொல்கத்தா போலீசார் அமெரிக்க விசாரணை நுட்பங்களைக் கற்றுக்கொள்ளத் திட்டமிட்டுள்ளனர்.
போலீஸ் விசாரணையின் அடிப்படை நிபந்தனை, குற்றம் சாட்டப்பட்டவரைக் காவல் நிலையத்திற்கு வரவழைத்து நட்புடன் கேள்வி கேட்பது. காவல்நிலையத்தில் காவலில் வைக்கப்பட்ட பிறகு, குற்றவாளிகள் அல்லது குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் நட்புடன் பழகி அவர்களின் நம்பிக்கையைப் பெற்று அவர்களிடம் கேள்வி கேட்பது அமெரிக்க போலீஸ் பாணி.
இதுகுறித்து கொல்கத்தா மூத்த காவல்துறை அதிகாரி,”குற்றம் சாட்டப்பட்டவரிடம் மென்மையான தொனியில் பேசுவதன் மூலம், அவரின் நம்பிக்கையைப் பெறலாம். இதன் மூலம் குற்றவாளி அல்லது குற்றம் சாட்டப்பட்டவரின் மனதில் உள்ள குற்றத்தின் ரகசியத்தை அறிய முடியும். இந்த முறையில் மனித உரிமை மீறல் என்ற பேச்சுக்கே இடமில்லை. இந்த நுட்பத்தை பொறுமையுடன் கடைப்பிடித்தால், குற்றவாளி அல்லது குற்றம் சாட்டப்பட்டவருக்கு உடல் ரீதியாகத் தீங்கு விளைவிக்காமல் வழக்கிற்கு தேவையான விஷயங்களை வெளியே கொண்டு வர முடியும்” என்றார்.
இது தொடர்பாக ஐபிஎஸ் அதிகாரிகள்,”அமெரிக்காவின் பழக்க வழக்கங்களும், இந்நாட்டு வழக்கங்களும் ஒரே மாதிரியானது இல்லை. இதன் விளைவாக, பல்வேறு குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் நட்பாக இருப்பதை விட, முழு சம்பவத்தையும் மெதுவாகப் புரிந்துகொள்வது நல்லது” என்றனர்.
இதையும் படிங்க: சடலங்களை கொட்டும் பகுதியாக மாறியது யமுனா விரைவுச்சாலை