கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவின் ஸ்ட்ராண்ட் சாலையில் அமைந்துள்ள அடுக்கு மாடிக் கட்டடத்தில் நேற்று (மார்ச்.08) திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்த தீயணைப்பு துறையினர் எட்டு தீயணைப்பு வாகனங்களில் அங்கு சென்று தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
அந்த கட்டடத்தின் 13வது தளத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், நான்கு தீயணைப்பு வீரர்கள், இரண்டு ரயில்வே அலுவலர்கள், காவல் துறை அலுவலர் ஒருவர் உள்பட ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து பிரதமர் மோடி ட்வீட் செய்துள்ளார். அதில், ’கொல்கத்தாவில் ஏற்பட்ட தீ விபத்து வருத்தமளிக்கிறது. இந்த துயரமான நேரத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு என் ஆறுதல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக, பிரதமர் அலுவலகத்திலிருந்து வெளியிடப்பட்ட ட்வீட்டில், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 2 லட்ச ரூபாயும், படுகாயமடைந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:கொல்கத்தாவில் 13 அடுக்கு மாடிக் கட்டிடத்தில் தீ விபத்து!