மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூர் நகரைச் சேர்ந்தவர் ஜெயஸ்ரீ சிர்சாகர். 12 ஆண்டுகளுக்கு முன்பு, கணவர் உயிரிழந்த நிலையில், தனியாக வாழ்ந்துவந்துள்ளார். இதற்கிடையே, பெற்றோரை இழந்த தனது சகோதரர் மகன் யுவராஜை வளர்த்துவந்துள்ளார். சங்கிலி பகுதியில் சிறிய ஜெராக்ஸ் கடை ஒன்றை நடத்தி யுவராஜ், அவரின் சகோதரர்களை ஜெயஸ்ரீ வளர்த்துவந்துள்ளார்.
தான் பெற்ற குழந்தைகளைப் போல் ஜெயஸ்ரீ அவர்களைப் பார்த்துக் கொண்டுள்ளார். இந்நிலையில், 240 கிராம் எடையுள்ள வெள்ளி காலணிகளை யுவராஜ் ஜெயஸ்ரீக்கு பரிசாக அளித்துள்ளார்.
இதுகுறித்து யுவராஜ் நமது ஈடிவி செய்தியாளரிடம் கூறுகையில், "பெற்றோர் இறந்த பிறகு என்னுடைய அத்தைதான் என்னைப் பார்த்துக் கொண்டார். தன்னுடைய சொந்தக் குழந்தைபோல் என்னை வளர்த்து எனக்குத் தேவையான அனைத்தையும் வாங்கிக் கொடுத்துள்ளார்.
எனவே, உலகில் எவரும் கொடுக்காத வெள்ளி காலணிகளைப் பரிசாக கொடுக்க வேண்டும் என நினைத்தேன். இந்நிலையில் தான், வெள்ளி முகக் கவசங்களை செய்யும் சந்தீப் குறித்து அறிந்தேன். அவரிடம் வெள்ளி காலணிகளை செய்து தரும்படி கேட்டுக் கொண்டேன். அவரும் முதல் முறையாக அதனைச் செய்துகொடுத்தார்" என்றார்.