மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர பேட்டருமான விராட் கோலி ஒன் 8 கம்யூன் (One18 Commune) என்ற பெயரில் உணவகங்கள் நடத்தி வருகிறார். தனது ஜெர்ஸி நம்பரான '18'-ஐ குறிக்கும் வகையில் இந்த உணவகங்களுக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது.
விராட் கோலியின் உணவகங்கள் டெல்லி, கொல்கத்தா, புனே ஆகிய நகரங்களில் பல்வேறு இடங்களில் இயங்கி வருகின்றன. அதைத்தொடர்ந்து அவர் மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் தனது உணவகத்தின் புதிய கிளையை தொடங்க இருப்பதாக சில மாதங்களுக்கு முன் தகவல் வெளியானது.
இதற்காக மறைந்த பிரபல பாடகர் கிஷோர் குமாரின் சொகுசு பங்களாவில் ஒரு பகுதியை விராட் கோலி விலைக்கு வாங்கி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் கிஷோர் குமாரின் சொகுசு பங்களாவை, விராட் கோலி உணவகம் தொடங்க இருப்பது உறுதியாகியுள்ளது. ஆனால், பங்களாவை விலைக்கு வாங்காமல், விராட் கோலி குத்தகைக்கு எடுத்திருப்பதாக பாடகர் கிஷோர் குமாரின் மகன் அமித் குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அமித் குமார் ஊடகங்களிடம் கூறியதாவது, "எங்களின் பங்களாவின் ஒரு குறிப்பிட்ட பகுதியை விராட் கோலிக்கு அடுத்த 5 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு கொடுத்துள்ளோம். கடந்த சில மாதங்களாக இதுகுறித்த பேச்சுவார்த்தைகள் நடத்துகொண்டிருந்தது" என்றார். கிஷோர் குமாரின் இந்த சொகுசு பங்களா மும்பையின் ஜுஹு பகுதியில் உள்ளது. இதனிடையே விராட் கோலியுடைய உணவகத்தின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், 'விரைவில்... மும்பை ஜூஹூ...' என்று பதிவிடப்பட்டுள்ளது.
விராட் கோலி, தற்போது ஆசிய கோப்பை தொடரில் விளையாடி வருகிறார். பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பான பங்களிப்பை அளித்த அவர், ஹாங்காங் உடனான போட்டியில் அரைசதம் அடித்து அசத்தியிருந்தார். 1,000 நாள்களை கடந்து அவர் சர்வதேச அளவில் ஒரு சதத்தைக் கூட பதிவு செய்யாத நிலையில், இந்திய டி20 அணியில் அவரது இடம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பையை எதிர்நோக்கி விராட் கோலி மீது பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: AIFF President: பைசங் பூட்டியாவை வீழ்த்தினார் கல்யாண் சௌபே...