புதுச்சேரி: ரங்கசாமியோ நமச்சிவாயமோ புதுச்சேரி முதலமைச்சராக வர முடியாது என்று தி.க. தலைவர் கி. வீரமணி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி மாநிலம் திராவிடர் கழகம் சார்பில், தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டம் சுதேசி மில் அருகே நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி முன்னிலை வகித்தார்.
திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கலந்துகொண்டு பேசியபோது, "தமிழ்நாடு, புதுச்சேரி சட்டப்பேரவைகளுக்கு வரும் 6ஆம் தேதி தேர்தல் நடக்க இருக்கிறது. இந்தத் தேர்தல் மிகவும் வித்தியாசமான தேர்தல், அதில் புதுச்சேரியில் இன்னும் வித்தியாசமான தேர்தல்.
கடந்த தேர்தலில் பாஜக 30 தொகுதிகளில் போட்டியிட்டு அனைத்திலும் தோல்வியடைந்தது. அதிலும், 29 இடங்களில் வைப்புத்தொகையை இழந்தது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் ஆட்சியை டெல்லி அதிகாரத்தைப் பயன்படுத்தியும், மோடி வித்தைகளைப் பயன்படுத்தியும் கவிழ்த்து பாஜக. இத்தகைய ஜனநாயகப் படுகொலையைச் செய்துவிட்டு இங்கேயே வந்து ஜனநாயகவாதிபோல பிரதமர் மோடி பேசுகிறார்.
மக்கள் சிந்திக்க வேண்டும். இது எங்களுடைய பிரச்சினை இல்லை, புதுச்சேரி மக்களின் உரிமைப் பிரச்சினை" என்றார். தொடர்ந்து பாஜக வேறு திட்டங்கள் வகுத்திருக்கிறது இங்கு ரங்கசாமியோ ,நமச்சிவாயமோ முதலமைச்சராக வர முடியாது என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க : தமிழ்நாடு, புதுச்சேரியில் அமித் ஷா இன்று பரப்புரை