ககாரியா: பீகார் மாநிலம் ககாரியாவை சேர்ந்தவர், நீரஜ். தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கும் ரூபி தேவி என்பவருக்கும் 2009ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. தம்பதியருக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், பஸ்ராகா பகுதியைச் சேர்ந்த முகேஷூடன், ரூபிக்கு தவறான உறவு ஏற்பட்டது. கடந்த 2022ம் ஆண்டு முகேஷூம், ரூபியும் வீட்டை விட்டு ஓடிச்சென்று திருமணம் செய்து கொண்டனர்.
இதையடுத்து முகேஷ் தனது மனைவியை கடத்திச் சென்றுவிட்டதாக, போலீசில் நீரஜ் புகார் அளித்தார். கிராம பஞ்சாயத்து பலமுறை எச்சரித்தும், தனது மனைவியுடனான உறவை முகேஷ் தொடர்ந்ததாக குற்றம்சாட்டினார். மேலும், முகேஷூக்கு தகுந்த பாடம் கற்பிக்க முடிவு செய்தார், நீரஜ். இவ்விவகாரத்தில், இருவரது மனைவிகள் பெயரும் ரூபி ஆகும்.
இதற்கிடையே, தன்னை விட்டு ஓடிச்சென்ற கணவர் முகேஷ் மீது அவரது மனைவி ரூபியும் கடும் கோபத்தில் இருந்துள்ளார். இந்நிலையில், முகேஷின் மனைவி ரூபியுடன் நீரஜூக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் ஒருவாரமாக பேசிக் கொண்ட நிலையில், திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இதைத் தொடர்ந்து கடந்த 18ம் தேதி, இருவரும் கோயிலில் திருமணம் செய்து கொண்டனர்.
தனது மனைவியுடன் ஓட்டம் பிடித்த நபருக்கு, அவரது மனைவியையே திருமணம் செய்து, இளைஞர் பதிலடி அளித்த சம்பவம் பேசுபொருளாகி வருகிறது.
இதையும் படிங்க: வெங்காயம் விலை கூடும் அபாயம்? வெளிநாட்டு ஏற்றுமதிக்கு மத்திய அரசு கிரீன் சிக்னல்!