திருவனந்தபுரம்: நியூசிலாந்து பிரதமர் ஜெசின்டாவின் புதிய அமைச்சரவையில் கேரளாவைச் சேர்ந்த பிரியங்கா ராதாகிருஷ்ணன் அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.
41 வயதான பிரியங்கா, சமூகம் மற்றும் தன்னார்வத் துறை அமைச்சராக இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். சென்னையில் பிறந்து சிங்கப்பூரில் வளர்ந்த பிரியங்காவின் பூர்வீகம், கேரள மாநிலம் பரவூரைச் சேர்ந்தது. அவரது தாத்தா கேரளாவைச் சேர்ந்த மருத்துவ நிபுணர் மற்றும் கம்யூனிஸ்ட் ஆவார்.
இரண்டு முறை ஆக்லாந்து எம்பியான பிரியங்கா, தனது மேற்படிப்புக்காக நியூசிலாந்து சென்றார். அங்கு கிறிஸ்ட்சர்ச்சை சேர்ந்த ஒரு ஐடி ஊழியரை மணம் முடித்துக்கொண்டார். 2004ஆம் ஆண்டு முதல் தொழிலாளர் கட்சியின் செயற்பாட்டாளராக இருக்கிறார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற ஓணம் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவிக்க ஜெசின்டாவுடன் பிரியங்கா நேரலையில் தோன்றினார். அப்போதுதான் பலருக்கும் இவரைப் பற்றி தெரியவந்தது. கேரளத்தை பூர்வீகமாகக் கொண்ட பிரியங்காவுக்கு மலையாளப் பாடல்கள் என்றால் விருப்பம் அதிகமாம். கேஜே யேசுதாஸ் தனது மனம் கவர்ந்த பாடகர் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: குஜ்ஜார் இன மக்கள் இட ஒதுக்கீடு கேட்டு தொடர் போராட்டம்!