திருவனந்தபுரம் (கேரளா): 1995ஆம் ஆண்டுக்கு முன்னர், கேரளாவில் ஆயிரக்கணக்கான அரசுப் பள்ளி ஆசிரியர்கள், தாங்கள் வேலை இழக்க நேரிடும் என்ற அச்சத்தில் இருந்தனர். பெரும்பாலும் அரசுப் பள்ளிகளில் மாணவர்களைத் தக்கவைத்துக்கொள்வதற்கான அவர்களின் முயற்சிகள் படுதோல்வியடைந்தன. ஏனெனில் பெற்றோர்கள் தொடர்ந்து நாகரீகமான, நன்கு பராமரிக்கப்படும் தனியார்ப் பள்ளிகளுக்குப் பின்னால் அணிவகுத்துச் சென்றனர்.
நடுத்தர வர்க்க குடும்பங்கள், தங்கள் குழந்தைகளைத் தனியார்ப் பள்ளிகளில் படிக்க வைப்பதற்காக தங்கள் சொத்துக்களை விற்று பள்ளி கட்டணத்தைச் செலுத்தினர். வகுப்பறைகள் குறைப்பு, வேலையிழப்பு போன்றவை பொதுக் கல்வி முறையில் அன்றைய வழக்கமாக இருந்தன. அரசுப் பள்ளிகளுக்குக் குழந்தைகளைக் கவர்ந்திழுக்க ஆசிரியர்கள் அருகிலுள்ள வீடுகளுக்குச் சென்றனர். அரசுப் பள்ளிகளில் தேர்ச்சியை மேம்படுத்த அவர்களின் முயற்சிகள் பலனளித்தாலும், மாணவர்கள் அரசுப் பள்ளியிலிருந்து தனியார்ப் பள்ளிகளுக்கு இடம்பெயர்வது தடையின்றித் தொடர்ந்தது.
அனைத்தும் கைவிட்டுப் போனதாகத் தோன்றியபோது, கேரளாவின் பொதுக் கல்வி முறை ஒப்பிடமுடியாத ஒரு மறுமலர்ச்சியை 2016 முதல் காணத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து நாலரை ஆண்டுகளுக்குள் நிதி ஆயோக்கின் மாநில கல்வித் தரக் குறியீட்டு அறிக்கை 2019இல், கேரளாவின் பொதுக் கல்வி முறை நாட்டின் மிகச் சிறந்ததாக மதிப்பிட்டது.
அரசு எவ்வாறு சாதித்தது?
அனைவருக்கும் தரமான கல்வியை உறுதி செய்வதற்கும், பொதுக் கல்வி முறைக்குப் புத்துயிர் அளிப்பதற்கும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பேராசிரியர் சி.ரவீந்திரநாத், 2016ஆம் ஆண்டில் 'பொதுக் கல்வி புத்துணர்ச்சி இயக்கம்' என்ற சிறப்புப் பணியைத் தொடங்கினார். தற்போது நான்கரை ஆண்டுகளில் அதன் முடிவுகள் வியக்க வைக்கின்றன.
அந்த இயக்கம் தொடங்கப்பட்டவுடன், அரசாங்கம் பல்வேறு திட்டங்களைத் தொடங்கியது. 2001-02ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ஐடி@பள்ளி திட்டம், கேரள உள்கட்டமைப்பு மற்றும் கல்விக்கான தொழில்நுட்பம் (KITE) என்ற பெயரில் மீண்டும் தொடங்கப்பட்டது. கேரளாவின் கல்வித் துறையின் முதல் சிறப்பு நோக்கம் கொண்ட நிறுவனமான கைட், ஒரு கடினமான பணியைக் மேற்கொள்ள வேண்டியிருந்தது. மாநிலத்தில் 15,000க்கும் மேற்பட்ட அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் ஐசிடி (ICT) செயல்பாடுகளை வடிவமைத்தல், மேம்படுத்துதல் மற்றும் கற்பித்தல் ஆகியவை கைட்-இன் முக்கிய நோக்கமாக இருந்தது.
கேரள உள்கட்டமைப்பு மற்றும் முதலீட்டு நிதி வாரியத்தால் (KIIFB) நிதியளிக்கப்பட்ட முதல் சிறப்பு நோக்கம் கொண்ட நிறுவனமானது 'கைட்'. கூட்டு உள்ளடக்க மேம்பாட்டுச் செயல்முறைக்கு 15,000 பள்ளிகளை இணைக்கும் 'சமக்ரா' உள்ளடக்க போர்டல், சம்பூர்ணா பள்ளி மேலாண்மை மென்பொருள், ஸ்கூல் விக்கி போன்ற சிறப்பு முயற்சிகள் மூலம் பொதுக் கல்வி புத்தாக்கப் பணிக்கு 'கைட்' துணைபுரிகிறது. கோவிட் ஊரடங்கைத் தொடர்ந்து இணையவழி வகுப்புகளுக்குக் கல்வி முறை மாற்றப்பட்டபோது, நாட்டின் முதல் முழுமையான 'விக்டர்ஸ்' எனும் தொலைக்காட்சி அலைவரிசையை 'கைட்' அறிமுகப்படுத்தியது.
‘கைட்’ அரசு அமைப்பால் தொடங்கப்பட்ட ஒரு சிறப்புத் திட்டமான 'லிட்டில் கைட் ஐடி கிளப்ஸ்' ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு அனிமேஷன், சைபர் பாதுகாப்பு, வன்பொருள், மின்னியல், மின்னணுவியல், மலையாள கம்ப்யூட்டிங், செயற்கை நுண்ணறிவு. ரோபாட்டிக்ஸ் ஆகியன போன்ற 5 வெவ்வேறு துறைகளில் சிறப்புப் பயிற்சி அளித்தது. ஒவ்வொரு ஆண்டும் 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் 'கைட்' வழங்கும் ஐ.சி.டி முயற்சிகள் மூலம் பயனடைந்துள்ளனர்.
பாலின சமத்துவத்தில் சிறப்புக் கவனம்:
கல்வி புத்துணர்ச்சிப் பணியின் ஒரு பகுதியாக, பள்ளிக் குழந்தைகளிடையே சிறந்த பாலின உணர்திறனை உறுதி செய்வதற்கான சிறப்புத் திட்டம் தொடங்கப்பட்டது. GET-UP (எழுந்திருங்கள்) எனப்படும் மேல்நிலை, இடைநிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பெண் குழந்தைகளின் வளர்ச்சியை நோக்கமாகக் கொண்ட பெண்களுக்கு அதிகாரமளிக்கும் பயிற்சித் திட்டம். பாலினம் தொடர்பாகப் பள்ளி நடவடிக்கைகளிலுள்ள இடைவெளிகளைப் புரிந்துகொள்ளக் குழு கலந்துரையாடல், விவாதங்கள் மற்றும் பிற நடவடிக்கைகளை மேற்கொண்டு குழந்தைகளை ஊக்குவிக்கும் வகையில், இந்த பள்ளிகளில் சிறப்புப் பெண்கள் குழுக்கள் நிறுவப்பட்டன. பாலின சமத்துவம் மற்றும் பெண்கள் அதிகாரம் ஆகிய கருப்பொருள்களில் பள்ளியின் ஆண்டுவிழாவை நடத்த அவர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
உள்ளூர் பள்ளிகள், உள்ளூர் மக்கள் ஈடுபாடு:
உள்ளூர் வாசிகளுக்கு அரசுப் பள்ளிகளின் உரிமையை உணர்த்தி, பொது பங்கேற்பு கல்வி என்பது தான் சரியான திசை என்று புரியவைக்கப்பட்டது. பொதுமக்கள் கூட்டு என்ற புதுமையான கருத்தாக்கத்தின் மூலம் பொது-தனியார் கூட்டாண்மை என்ற கருத்தைக் கேரளா மறுவரையறை செய்தது. இந்தக் கருத்தில் முதல் பொதுமக்கள் KIIFB மூலம் பள்ளி வளர்ச்சிக்கு நிதியளிப்பை ஓட்டத்தை உறுதி செய்த அரசாங்கம், இரண்டாவதாகத் தரமான கல்வியை உறுதிப்படுத்த உள்ளூர் மக்கள் தீவிரமாகப் பங்கேற்க வைத்தது. KIIFB நிதி தவிர, உள்ளூர் பஞ்சாயத்து, நகராட்சி மற்றும் மாவட்ட பஞ்சாயத்து ஆகியவற்றின் நிதிகள் மற்றும் எம்.பி., எம்.எல்.ஏக்கள்., நிதிகள் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காகச் சேர்க்கப்பட்டன.
பள்ளி நவீனமயமாக்கல் திட்டம் ஒட்டுமொத்த தர மேம்பாட்டிற்காக வகுப்பறையில் கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்பச் சூழலை வெற்றிகரமாக இணைத்தது. அரசுப் பள்ளிகளின் உடல் உள்கட்டமைப்புகளை மேம்படுத்த பொது மற்றும் பள்ளி முன்னாள் மாணவர்களின் பங்கேற்பும் ஊக்குவிக்கப்பட்டது.
விருப்ப மொழி:
அரசுப் பள்ளிகளில் ஆங்கிலக் கல்வியின் தரம் குறைவாக இருப்பது மாணவர்கள் கேரளாவில் அரசுப் பள்ளிகளைக் கைவிடுவதற்கு முக்கியக் காரணங்களில் ஒன்றாகும். புத்தாக்க பணியின் ஒரு பகுதியாக, அரசாங்கம் இருவகைப் பள்ளிகளை ஒரே வளாகத்தில் தொடங்கி, மாணவர்களுக்கு அவர்களின் கற்பித்தல் ஊடகத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்வை வழங்கியது. எனவே, கேரளாவில் உள்ள பெரும்பாலான அரசுப் பள்ளிகளில் மலையாளம் மற்றும் ஆங்கில வழிப் பள்ளிகள் உள்ளன.
இரண்டுமே மாணவர்களை சமமாக ஈர்க்கின்றன. ஆங்கிலவழிப் பள்ளிகளை இணைத்ததன் மூலம், மலையாள வழிப் பள்ளிகளில் ஆங்கிலக் கல்வியின் தரமும் பெருமளவில் முன்னேறியுள்ளது. பாடத்திட்டங்கள் மற்றும் பாடத்திட்ட நடவடிக்கைகளில் பயனுள்ள மாற்றங்கள் அரசாங்கப் பள்ளி மாணவர்கள் உலகின் வேறு எந்தப் பள்ளி மாணவர்களுடனும் போட்டியிட முடியும் என்பதை உறுதிப்படுத்தியது.
எங்கள் குழந்தைகளை நாங்கள் கவனித்துக்கொள்கிறோம்:
பொதுக் கல்வித் துறையைச் சேர்ந்த மாணவர்களுக்கு நன்மை பயக்கும் கல்வி என்ற கருத்தைக் கேரளா மக்களிடம் பதியச் செய்தது. அனைத்து மாணவர்களுக்கும் அவர்களின் நிதி நிலையைப் பொருட்படுத்தாமல் 8 ஆம் வகுப்பு வரை, சீருடைகள் இலவசமாக விநியோகிக்கப்படுகின்றன. பெண் மாணவர்கள் மற்றும் எஸ்.சி/ எஸ்.டி மாணவர்கள் 10 ஆம் வகுப்பு வரை தங்கள் சீருடைகளை இலவசமாகப் பெறுகிறார்கள். கேரள அரசு மாணவர்களுக்குக் கைத்தறி சீருடைகளை வழங்க முடிவுசெய்தது. இதனால் நலிந்துவரும் ஒரு தொழில் மீண்டும் உயிர்ப்பிக்கத் தொடங்கியது.
சீருடைகள் தவிர, ஊட்டச்சத்து உணவுத் திட்டத்தின் கீழ், நண்பகல் உணவைத் தவிரப் பால் மற்றும் முட்டை ஆகியவை அனைத்து பள்ளிகளிலும் இலவசமாக வழங்கப்படுகின்றன. 8ஆம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களுக்கும் புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படுகின்றன. குழந்தைகளுக்கு அதிக சுமைகளைத் தவிர்ப்பதற்காக, பாடப்புத்தகங்கள் தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டன. பள்ளி மீண்டும் திறக்கப்படுவதற்கு முன்னதாக, மாணவர்களுக்குப் புத்தகங்கள் வழங்கப்பட்டன.
இப்போது கேரளாவில் உள்ள அரசுப் பள்ளிகள் எந்தவொரு சர்வதேசப் பள்ளிகளுக்கும் உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் கல்வித் தரம் ஆகியவற்றுடன் இணையாக உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் அரசுப் பள்ளிகளுக்கு மாணவர்கள் பெருமளவில் வருவது கேரளாவில் பொதுக் கல்வி முறை அடைந்துள்ள முன்னேற்றத்திற்குச் சான்றாகும்.
கேரள மாநிலத்தின் அரசு பொதுக் கல்வி முறை சீரமைப்பு குறித்த சில முக்கிய தகவல்களைக் காணலாம்:
- 2021இல் கேரளாவில் பொதுக் கல்வியில் சேர்ந்த புதிய மாணவர்கள்: 1.75 லட்சம்
- 2019-20இல் பொதுக் கல்வியில் புதிய சேர்க்கை: 1.63 லட்சம்
- 4 ஆண்டுகளில் பொதுக் கல்வியில் புதிய சேர்க்கை: 6.8 லட்சம்
- இரண்டு ஆண்டுகளில் 5ஆம் வகுப்பில் பெரும்பாலான சேர்க்கைகள் நடந்தன
- 2019ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட புதிய ஆசிரியர்கள்: 1506
- வகுப்பறை குறைப்புக் காரணமாக வேலை இழந்த 4000 ஆசிரியர்கள் மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டனர்.
- சமேதம் திட்டத்தின்கீழ், ‘கைட்’ அமைப்பால் தொடங்கப்பட்ட நவீனப் பள்ளிகள் மற்றும் நவீன ஆய்வகத் திட்டத்திற்கு KIIFBஆல் நிதியளிக்கப்பட்டன.
- 16,009 பள்ளிகளுக்கு ஐ.சி.டி உள்கட்டமைப்பு.
- ஒரு லட்சத்து 19ஆயிரத்து 51 மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன.
- 69,945 ப்ரொஜெக்டர்கள் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன
- 43,250 உதிரி பாகங்கள்
- 23,098 திரைகள் அமைக்கப்பட்டுள்ளன
- 4,545 தொலைக்காட்சிப் பெட்டிகள் கொடுக்கப்பட்டுள்ளன
- 4,609 அச்சுப்பொறிகள்
- 4,578 படக்கருவிகள்
- 4,720 வலை படக்கருவிகள்
- ஒரு லட்சத்து 439 ஒலிப்பெருக்கிகள்