2019ஆம் ஆண்டு சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்ததற்காக கேரளாவைச் சேர்ந்த ராபின் வடக்குஞ்சேரி என்னும் கத்தோலிக்க பாதிரியாருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது.
பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சிறுமிக்கு குழந்தையும் பிறந்தது. இதனைத்தொடர்ந்து கத்தோலிக்க திருச்சபை அந்தப் பாதிரியாரை பதவியிலிருந்து 2020ஆம் ஆண்டு நீக்கியது.
வன்புணர்வு செய்யப்பட்ட சிறுமி வடக்குஞ்சேரி பாதிரியராக இருந்த திருச்சபையைச் சேர்ந்தவர். 2016ஆம் ஆண்டு தனது பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளை எழுதிய சிறுமி ஆலயத்தில் ஒரு சிறிய வேலைக்காகச் சென்றுள்ளார். மதிய வேளையில் மற்ற சிறுமிகள் வீட்டிற்குச் சென்ற நிலையில் அச்சிறுமியை வடக்குஞ்சேரி வன்புணர்வு செய்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து யாரிடமும் சொல்லக் கூடாது என மிரட்டியிருக்கிறார் பாதிரியார். இதனையடுத்து சிறுமி கர்ப்பமாகியுள்ளார். இது வீட்டில் யாருக்கும் தெரியாமல் இருந்துள்ளது.
2017ஆம் ஆண்டில் சிறுமிக்கு வயிற்றில் வலி ஏற்படவே, அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதன் பிறகு சிறுமி கர்ப்பமாய் இருப்பது தெரியவந்துள்ளது. அவருக்கு குழந்தையும் பிறந்துள்ளது.
இதற்குக் காரணம் வடக்குஞ்சேரிதான் எனச் சிறுமி தனது வீட்டில் தெரிவித்துள்ளார். அவரது பெற்றோர் அது குறித்து பாதிரியாரிடம் கேட்கவே, அவர் மருத்துவமனை பில்லுக்கா 30,000 ரூபாய் கொடுத்துள்ளார். இந்த விஷயம் வெளியில் தெரியவரவே வடக்குஞ்சேரி கைதுசெய்யப்பட்டார்.
இதனைத்தொடர்ந்து வன்புணர்வு செய்த பெண்ணை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி வடக்குஞ்சேரி கேரள உயர் நீதிமன்றத்தில் கோரியிருந்தார்.
ஆனால் அந்த மனுவை நீதிமன்றம் தள்ளூபடி செய்தது. ஐந்து மாதங்களுக்குப் பிறகு, வன்புணர்வு செய்யப்பட்ட சிறுமி, உச்ச நீதிமன்றத்தை அணுகி, தன்னை வன்புணர்வு செய்த முன்னாள் பாதிரியாரை திருமணம் செய்துகொள்ள அனுமதி கோரியுள்ளார்.
இது தான் விருப்பப்பட்டு எடுத்த முடிவு என்றும் தெரிவித்துள்ளார். இந்த வழக்கு நாளை மறுதினம் (ஆகஸ்ட் 2) விசாரணைக்கு வருகிறது.
இதையும் படிங்க: கோவாவில் அடுத்தடுத்து சிறுமிகள் பாலியல் வன்புணர்வு- பொறுப்பில்லாமல் பேசிய முதலமைச்சர்!