எர்ணாகுளம்: கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தின் ஆலுவா நகரைச் சேர்ந்தவர் ஆதிலா நஸ்ரின். இவர் கேரள உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அம்மனுவில் நஸ்ரின், 'தாம் பாத்திமா நூரா என்ற பெண்ணை காதலித்து வந்த நிலையில், எங்களின் காதலுக்கு இருவரின் பெற்றொரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், வீட்டை எதிர்த்து நாங்கள் இணைந்து வாழ விரும்பினோம். இதனைத் தொடர்ந்து, எனது இணையர் பாத்திமா நூராவை, அவர் பெற்றோர் வீட்டுச் சிறையில் வைத்துள்ளனர். எனவே, எனது இணையரை பெற்றோரிடம் இருந்து மீட்டு, இணைந்து வாழ எங்களுக்கு அனுமதி அளியுங்கள்' எனக் குறிப்பிட்டிருந்தார்.
ஆதிலா நஸ்ரின், பாத்திமா நூரா இருவரும் சவூதி அரேபியாவில் பள்ளியிலிருந்தே காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதலை அறிந்த இருவரின் பெற்றோரும், எதிர்ப்பு தெரிவித்தனர். ஒருகட்டத்தில் இரு குடும்பமும் கேரளா வந்த பின்னரும், நஸ்ரின் - பாத்திமா காதல் தொடர்ந்துள்ளது. இருவருக்கும் வேலை கிடைத்த பின்னர் இணைந்து வாழ்வதற்கு முடிவு செய்தனர்.
கடந்த மே 19ஆம் தேதி, கோழிக்கோடு மாவட்டத்தில் நூராவை, நஸ்ரின் சந்தித்துள்ளார். மேலும், இருவரும் அங்குள்ள மகளிர் பாதுகாப்பு மையத்தில் அடைக்களமாகியுள்ளனர். இதை அறிந்த நஸ்ரின் பெற்றோர் இருவரையும் ஆலுவாவிற்கு வலுகட்டாயமாக அழைத்துச்சென்றுள்ளனர். அதன்பின், பாத்திமாவின் உறவினர்கள் ஆலுவாவிற்கு வந்து அவரை கடத்திச்செல்ல முயற்சித்துள்ளனர். அதற்கு நஸ்ரின் பெற்றோர் எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், பாத்திமாவை மீட்டுத்தர வேண்டி நஸ்ரின் நேற்று முன்தினம் (மே 30) கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், இவ்வழக்கு நேற்று (மே31) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. விசாரணைக்கு பின்னர், நஸ்ரின் - பாத்திமா இணையர் இருவரும் இணைந்து வாழ அனுமதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையும் படிங்க: 'அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்' அனைவரும் ஓரினம்!