பத்தனம்திட்டா: கேரள மாநிலத்தின் பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வரும் திவ்யா எஸ். ஐயர், ஐஏஎஸ், தனக்கு 6 வயதாக இருக்கும்போது 2 ஆண்களால் பாலியல் சீண்டலுக்கு ஆளானதாக வெளிப்படையாக தெரிவித்தார். நாட்டில் பாலியல் தொடர்பான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையிலான மகளிர் பாதிக்கப்படுகின்றனர். இவற்றில் பெரும்பாலான சம்பவங்கள் வெளியே தெரிவதில்லை.
குறிப்பாக, 18 வயதுக்கு கீழே உள்ள சிறுமிகள் தங்களுக்கு ஏற்படும் பாலியல் தொடர்பான துன்புறுத்தல்கள் குறித்து வெளியே சொல்ல அச்சமும், தயக்கமும் காட்டுகின்றனர். இதனால் மத்திய, மாநில அரசாங்கங்கள் போலீசார் மற்றும் மகளிக் குழுக்கள் உதவி உடன் பல்வேறு விழிப்புணர்வு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றன. பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகின்றன.
இதனிடையே பிரபலங்கள், அரசு அதிகாரிகள் கூட தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் துன்புறுத்தல் குறித்து தைரியமாக வெளியே கூறி, பெண்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்து வருகின்றனர். அந்த வகையில், கேரளாவைச் சேர்ந்த பெண் ஐஏஎஸ் அதிகாரி திவ்யா தனக்கு 6 வயதில் ஏற்பட்ட கசப்பான சம்பவம் குறித்து மனம் திறந்து பேசி உள்ளார்.
கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் இன்று (மார்ச் 29) மாநில இளைஞர் நல வாரியம் சார்பில், "பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் பெண்கள் அதுதொடர்பாக வெளியே தெரிவிக்கும்போது கடைபிடிக்க வேண்டியவை" என்னும் தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அந்த மாவட்ட ஆட்சியர் திவ்யா எஸ். ஐயர் ஐஏஎஸ் கலந்து கொண்டார்.
அப்போது அவர் உரையாற்றுகையில், "எனக்கு 6 வயதாக இருக்கும்போது. 2 ஆண்களால் பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கப்பட்டேன். இதுகுறித்து அப்போதே எனது பெற்றோரிடம் தெரிவித்தேன். அவர்கள் எனக்கு அளித்த ஆதரவும், நம்பிக்கையும் வாழ்க்கையில் நான் தொடர்ந்து முன்னேற வழிவகுத்தது.
அப்போதே 'நல்ல தொடுதல்' மற்றும் 'கெட்ட தொடுதல்' என்றால் என்ன என்பதை அறிந்து கொண்டேன். எப்போதும் கவனமுடன் இருப்பேன். பெற்றோர்களும் ஆசிரியர்களும் மட்டுமே குழந்தைகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும். ஆகவே, பெண் குழந்தைகளுக்கு, சிறு வயதிலேயே 'நல்ல தொடுதல்' மற்றும் 'கெட்ட தொடுதல்' பற்றிக் கற்றுக் கொடுக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சென்னை கலாக்சேத்ரா கல்லூரி பாலியல் வழக்கில் திடீர் திருப்பம்