திருவனந்தபுரம்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஐ) மாநில செயற்குழு, சட்டப்பேரவை தேர்தலில் களமிறங்கக்கூடிய வேட்பாளர்களின் பட்டியலை சமர்ப்பிக்குமாறு கட்சியின் மாவட்டக் குழுக்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
புதன்கிழமை (பிப்.10) கூடிய கட்சியின் செயற்குழு, ஒவ்வொரு மாவட்டத்திலும், சிபிஐ போட்டியிட்ட ஒவ்வொரு இடங்களுக்கும் மூன்று சாத்தியமான வேட்பாளர்களின் பட்டியலை சமர்ப்பிக்குமாறு மாவட்டக் குழுக்களைக் கேட்டுள்ளது. இதில், தொடர்ச்சியாக மூன்று முறை போட்டியிட்டோரை தவிர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும் போது இந்த அளவுகோலை கண்டிப்பாக கடைப்பிடிக்க கட்சி செயற்குழு உத்தரவிட்டுள்ளது. இதனால், சட்டப்பேரவையில் தற்போதைய சிபிஐ அமைச்சர்களான வி எஸ் சுனில் குமார், பி திலோதமன் மற்றும் கே ராஜு ஆகியோருக்கு இந்த முறை வாய்ப்பு கிடைக்காது. இருப்பினும், வெற்றி திறனைக் கருத்தில் கொண்டு, சில வேட்பாளர்களுக்கு தளர்வு வழங்கப்படலாம். இந்த விஷயங்களில் இறுதி முடிவு வரும் நாள்களில் எடுக்கப்பட வாய்ப்புள்ளது.
இந்த அளவுகோலின் அடிப்படையில் அமைச்சர் இ.சந்திரசேகரன், துணை சபாநாயகர் வி சசி, இ கே விஜயன், சித்தயம் கோபகுமார், கீதா கோபி மற்றும் ஜி எஸ் ஜெயலால் ஆகியோர் மீண்டும் போட்டியிட அனுமதிக்கப்படலாம். அந்தந்த மாவட்டக் குழுக்களின் பரிந்துரைகளைக் கருத்தில் கொண்டு வேட்பாளர் தேர்வு குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும். சி திவாகரன், முல்லக்கர ரத்னகரன் மற்றும் ஈ எஸ் பிஜிமோல் ஆகியோரும் தொடர்ச்சியாக மூன்று முறை வென்றுள்ளனர். அந்தவகையில், நெடுமங்காட்டில் மற்றொரு வேட்பாளர் கிடைக்காவிட்டால், சி திவாகரனுக்கு இன்னும் ஒரு வாய்ப்பு வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க: கேரளத்தில் குலாம் நபி ஆசாத்- ஒரே கல்லில் மூன்று மாங்காய் அடிக்குமா காங்கிரஸ்?