கேரள மாநிலம், கோட்டையம் மாவட்டத்தைச் சேர்ந்த குமாரகோம் பகுதியைச் சேர்ந்தவர், மாற்றுத் திறனாளி ராஜப்பன். சிறுவயதில் இவருக்கு ஏற்பட்ட இளம்பிள்ளை வாதம், இவரது இரண்டு கால்களையும் செயலிழக்கச் செய்தது. ராஜப்பனுக்கு இயற்கை மீது அலாதிப் பிரியம்.
பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம்
சுற்றுச்சூழல் மீது கொண்ட அதீத ஈர்ப்பால், மீனாசில் ஆறு, வேம்பநாடு ஏரியில் இருந்த பிளாஸ்டிக் குப்பைகளை தனியாளாக அகற்றி வருகிறார். இதற்காக சிறிய படகு ஒன்றை வாடகைக்கு எடுத்து, கழிவுகளை கையோடு கொண்டு வந்து விற்கிறார். இந்த சொற்ப வருமானம் தான் ராஜப்பனின் வாழ்வாதாரம்.
சுற்றுச்சூழல் போராளி
தன்னால் நடக்க முடியாத நிலையிலும் கூட, கேரளாவிலேயே பெரிய ஏரியான வேம்பநாடு ஏரியை தவழ்ந்து தவழ்ந்து சுத்தப்படுத்தி வருகிறார் ராஜப்பன். இது குறித்து, பிரதமர் மோடி தனது ’மான் கி பாத்’ நிகழ்ச்சியில் குறிப்பிட்டு அவரைப் பாராட்டியுள்ளார்.
ராஜப்பனை கௌரவப்படுத்திய தைவான் அரசு
சொற்ப வருமானமே கிட்டினாலும், இயற்கைக்கு நல்லூழ் செய்ய, தொடர்ந்து இந்தப் பணியினை செய்யும் ராஜப்பனை, தற்போது தைவான் அரசு கண்டுகொண்டுள்ளது. அவரை கவுரவப்படுத்தும் விதமாக, தலைச்சிறந்த சுற்றுச்சூழல் போராளிக்கு வழங்கப்படும் சுப்ரீம் மாஸ்டர் சிங் ஹாய் சர்வதேச விருதை தைவான் அரசு வழங்கியது. இந்த விருதுடன் 10 ஆயிரம் டாலர், அதாவது இந்திய மதிப்பில் 7.3 லட்ச ரூபாய் ரொக்கத்தொகையையும் வழங்கியுள்ளது.