திருவனந்தபுரம்: கேரள தங்கக் கடத்தல் வழக்கில் முக்கியக் குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷ் சுங்கச் சட்டம் 108இன்படி கேரள உயர் நீதிமன்ற மாஜிஸ்திரேட் (நடுவர்) முன்பு ரகசிய வாக்குமூலம் அளித்தார்.
இதில், தற்போதை கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸின் முந்தைய தூதரகம் மற்றும் சட்டவிரோத நாணய பரிவர்த்தனைகளுடன் நெருங்கியத் தொடர்பு உள்ளதாகக் கூறியுள்ளார்.
இதையடுத்து, இவரது வாக்குமூலத்தைப் பிரமாண பத்திரமாக சுங்கத் துறை அலுவலர்கள் பதிவு செய்துகொண்டனர். அப்போது அவர், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், சபாநாயகர், மூன்று அமைச்சரவை உறுப்பினர்கள் ஆகியோருக்கு சட்டவிரோத பணப்பரிவர்த்தனையில் நேரடி தொடர்புள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், முதலமைச்சர், சபாநாயகர், அமைச்சர்கள் அரபு மொழியில் அவ்வளவாகப் புலமை இல்லாததால் அவர்களுக்கும் தூதரக அலுவலர்களுக்கும் இடையில்தான் மத்தியஸ்தம் செய்தாக கூறியுள்ளார்.
இவரது இந்த வாக்குமூலம் தங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக சுங்கத் துறையினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள கேரள காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதலா, கேரள முதலமைசச்ர பினராயி விஜயனை கடுமையாகச் சாடியுள்ளார்.
மேலும், பதவியில் தொடர்வதற்கு இனியும் அவருக்கு உரிமையில்லை எனக் குறிப்பிட்டுள்ளார். பாஜகவிற்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுகளுக்கும் ரகசிய பேச்சுவார்த்தைகளும் இருக்கலாம் எனவும் தெரிவித்தார்.