கரோனா பேரிடர் காலத்தில் மனிதநேயமற்ற பல சம்பவங்கள் நிகழ்ந்திருந்தாலும், ஜனார்த்தனன் போன்ற ஒரு சிலரின் செயல்கள் மனிதம் இன்னும் உயிர்போடு இருப்பதை உரக்கச் சொல்கின்றன. மெல்ல நம்மை கரம் பற்றி ஆற்றுப்படுத்துகின்றன.
யார் அந்த ஜனார்த்தனன்?
கேரளா மாநிலம், கண்ணூர் மாவட்டத்திலிருக்கும் குருவா என்கிற இடத்தில் பீடி சுற்றிப் பிழைக்கும் எளிய மனிதர், 53 வயதான ஜனார்த்தனன். மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர். செவித்திறனற்ற இவர், தனது வாழ்நாள் சேமிப்பின் பெரும்பங்கை முதலமைச்சர் பேரிடர் நிவாரண நிதிக்கு அளித்துள்ளார்.
கரோனா தடுப்பூசி இலவசமாகச் செலுத்தப்படும் என கேரள அரசு அறிவித்ததை ஒட்டி, அவர் இந்த செயலை செய்துள்ளார். சமீபத்தில் வங்கிக்குச் சென்ற ஜனார்த்தனன் தன் கணக்கில் எவ்வளவு இருப்புத் தொகை உள்ளது என வினவியுள்ளார்.
இதையடுத்து, தன் வங்கிக் கணக்கில் இருந்த 2 லட்சத்து 850 ரூபாயில், 2 லட்சம் ரூபாயை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அனுப்பியுள்ளார். சாதாரண பீடி சுற்றும் தொழிலாளியான ஜனார்த்தனுக்கு இத்தொகை மிகப்பெரியது. சொல்லப் போனால் இது அவரது வாழ்நாள் சேமிப்பு.
தினேஷ், பீடிக் கம்பெனியிலிருந்து ஓய்வு பெற்றபோது கிடைத்த வருங்கால வைப்பு நிதி, பீடித் தொழிலாளியான இவரது மனைவி ஓய்வு பெற்றபோது கிடைத்த பணிக் கொடை, மாதந்தோறும் மாநில அரசு வழங்கும் மாற்றுத் திறனாளிகளுக்கான பென்ஷன் ஆகியவற்றின் கூட்டுத் தொகை தான் நிவாரண நிதிக்கு வழங்கிய தொகையாகும்.
தனக்கு போகத்தான் தானமும், தர்மமும் என்பவர்களுக்கு மத்தியில், தன் மொத்த சேமிப்பையும் நிவாரணமாகக் கொடுக்கத் துணிந்த ஜனார்த்தனிடம், வங்கி ஊழியர்கள் சேமிப்பு இல்லாமல் எப்படி வாழமுடியும் எனக் கேள்வி எழுப்பியுள்ளனர்.
கரோனாவினால் வாழ்க்கை இழக்கும் என் சகோதர, சகோதரிகளின் உயிர்களை விட, அது மேலானதில்லை என கொஞ்சமும் தன்னலமின்றி தெரிவித்துள்ளார் ஜனார்த்தனன். கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், அம்மாநிலத்தில் அனைவருக்கும் இலவச கரோனா தடுப்பூசி வழங்கப்படும் என அறிவித்ததே, தன்னை நன்கொடை அளிக்கத் தூண்டியதாக ஜனார்த்தனன் தெரிவித்துள்ளார்.
இனிவரும் காலங்களில் பீடி சுற்றியே பிழைப்பு நடத்த நினைத்திருக்கும் ஜனார்த்தனனுக்கு, வங்கியில் வேண்டுமானால் இருப்பு இல்லாமல் இருக்கலாமே தவிர, அவர் பலர் இதயங்களில் நீங்கா இடம்பிடித்துள்ளார் என்பதை மறுப்பதற்கில்லை.